- Home
- Tamil Nadu News
- சென்னையில் இரட்டை சதம் அடித்த சின்ன வெங்காயம்: கிலோ ரூ.250 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி!
சென்னையில் இரட்டை சதம் அடித்த சின்ன வெங்காயம்: கிலோ ரூ.250 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி!
தொடர் மழையால் சின்ன வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து, சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.210 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது.

சென்னையில் இரட்டை சதம் அடித்த சின்ன வெங்காயம்
தொடர் மழை & வரத்துக் குறைவு காரணமாக சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்து, சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.210 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் இந்த திடீர் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விளைச்சல் பாதிப்பும் வரத்துக் குறைவும்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலும் பெய்து வரும் கனமழையால் சின்ன வெங்காய விளைச்சல் மற்றும் அறுவடைப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தைக்குத் தினமும் வழக்கமாக 20 லாரிகளில் வந்து கொண்டிருந்த சின்ன வெங்காயத்தின் வரத்து, தற்போது 10 முதல் 12 லாரிகளாகக் குறைந்துவிட்டது.
கடந்த வாரம் மொத்த விற்பனையில் கிலோ ரூ.150 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது தரத்திற்கு ஏற்ப ரூ.120 முதல் ரூ.180 வரை விற்பனையாகிறது. ஆனால், சில்லறை கடைகளில் கிலோ ரூ.200 முதல் ரூ.210-க்கும், சென்னையின் புறநகர் மற்றும் வெளி மார்க்கெட்டுகளில் ரூ.250 வரையிலும் உயர்ந்துள்ளது.
பிற காய்கறிகளின் விலை நிலவரம்
சின்ன வெங்காயம் மட்டுமின்றி, கோயம்பேடு சந்தையில் பிற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன் விவரம் (ஒரு கிலோவிற்கு) சின்ன வெங்காயம் (சில்லறை): ரூ.200 – ரூ.250
பட்டாணி (குளிர்கால வரத்து): ரூ.100 – ரூ.200
அவரைக்காய்: ரூ.100 – ரூ.120
முருங்கைக்காய்: ரூ.100 – ரூ.120
பெரிய வெங்காயம்: ரூ.50 – ரூ.65
பீன்ஸ்: ரூ.70
கேரட்: ரூ.70
பாகற்காய் (பன்னீர் பாகற்காய்): ரூ.50
சுரைக்காய்: ரூ.50
தக்காளி: ரூ.30 (நைஸ் கொத்தவரங்காய், உஜாலா கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது).
வியாபாரிகள் கூறுவது என்ன?
விலையேற்றம் குறித்து கோயம்பேடு வியாபாரிகள் கூறுகையில், அன்றாட சமையலுக்கு அத்தியாவசியமான சின்ன வெங்காயம் இரட்டை சதமடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைந்ததாலும், மழையின் காரணத்தாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. விலை ரூ.210-ஐ கடந்துள்ளதால் பொதுமக்கள் வாங்குவதைக் குறைத்து உள்ளனர். இதனால் சந்தையில் சரக்குகள் தேங்கியுள்ளன. மழை நின்று புதிய அறுவடைப் பயிர்கள் சந்தைக்கு வர இன்னும் சில வாரங்களாகும் என்பதால், அதுவரை விலை குறைய வாய்ப்பில்லை என்றனர்.
அரசுக்கு இல்லத்தரசிகள் கோரிக்கை
விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகள் கவலையுடன் கூறுகையில், "சின்ன வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே வாங்கப் பயமாக உள்ளது. இதனால் சாம்பார், காரக்குழம்பு போன்ற உணவுகளில் சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டோம். முன்பு ரூ.100-க்கு ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கிவிட முடியும்; ஆனால் இப்போது அரை கிலோ சின்ன வெங்காயம் வாங்கவே ரூ.100-க்கும் மேல் செலவாகிறது. இதனால் மாதாந்திர குடும்பச் செலவு அதிகரித்துள்ளது. எனவே, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த விலையேற்றம் உணவகங்களுக்கும் கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.











