செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்! முக்கிய வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணி நியமன முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. போக்குவரத்துத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. இவர் இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள்
இந்த விசாரணையின் போது தங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பணி நியமனங்களை செல்லாது என அறிவிக்க வேண்டுமென விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி மனுதாரர்களின் கோரிக்கையை 8 வாரங்களுக்குள் மீண்டும் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம்
இந்த உத்தரவை எதிர்த்து நம்பி வெங்கடேஷ் உள்ளிட்டோர் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்ட 33 இளநிலை பொறியாளர்களில் நான்கு பேர் மட்டுமே முறையான தகுதி பெற்றவர்கள். பல விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் மனுதாரர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்ற போதிலும் மொத்தமாக 33 இளநிலை பொறியாளர்களின் நியமனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய இது பொதுநல வழக்கு அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.
இன்று தீர்ப்பு வெளியாகிறது
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று
காலை 10.30 மணிக்கு வெளியாகிறது.