முதலமைச்சராக எனக்கு 2 வாய்ப்பு கிடைத்தது..! பகீர் கிளப்பும் செங்கோட்டையன்
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் முயற்சி மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் தான் அந்த பணியை செய்ய இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தலைமையை நினைவு கூர்ந்த அவர், கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தினார்

அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராகவும். கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவராகவும் இருப்பவர் செங்கோட்டையன், கடந்த பிப்ரவரியில் கோவையில் நடைபெற்ற அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறாததை காரணம் காட்டி செங்கோட்டையன் புறக்கணித்திருந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டினார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் தனது மனதில் உள்ளதை மக்களிடம் தெரிவிக்க இருப்பதாக கூறி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன், அப்போது அவர் கூறுகையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களையும், ஒதுங்கி இருந்தவர்களையும் நேரடியாக வீட்டிற்கு தேடி சென்று அழைத்து வந்தவர் எம்ஜிஆர், அவரது மறைவையடுத்து தலைவருக்கு பிறகு கட்சியை நடத்த ஆளுமை மிக்க தலைமை, மக்களிடம் செல்வாக்கு மிக்க தலைவர் நீங்கள் தான் வர வேண்டும் என ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்து அழைத்து வந்தோம்.
ஜெயலலிதா சிறந்த ஆட்சியை வழங்கினார். இந்திய நாடே திரும்பி பார்த்தது ஆளுமை மிக்க முதல்வராக இருந்தார். அடுத்ததாக சசிகலாவை பொதுச்செயலாளராக ஒருமனதாக நியமித்தோம். கால சக்கர சுழற்ச்சியில் மீண்டும் முதலமைச்சர் யார் என்று பார்க்கும் போது முன்னாள் முதலமைச்சர் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா முன் மொழிந்தார். இந்த இயக்கத்தை பொருத்தவரை பல்வேறு சோதனைகள், தடுமாற்றங்கள் வந்த போதும். எந்த வித தடுமாற்றம் இல்லாமல் பணியாற்றியதாக ஜெயலலிதா அவர்கள் என்னை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ஆடியோவும் வெளியிட்டுள்ளார்.
நமக்கு பல்வேறு பொறுப்புகள் வரும், கட்சியில் சோதனைகள் கிடைக்கும். இந்த இயக்கத்திற்காக எனது பணிகளை ஆற்றியுள்ளேன். தேசம் எப்படி இருக்க வேண்டும். தமிழகம் எப்படி இருக்க வேண்டும், இயக்க தொண்டர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றியுள்ளேன். எனக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வாய்ப்பு கிடைத்த போது கூட இந்த இயக்கம் உடைந்து போய்விடக்கூடாது என்பதற்காக தான் எனது பணிகளை மேற்கொண்டேன். இயக்கம் உடையக்கூடாது.
ஏன் என்றால் இந்த இயக்கத்தை நம்பியுள்ள கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் பிரிந்து சென்ற தலைவர்களை இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இன்னும் 10 நாட்களில் இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் இல்லையென்றால் அதற்கான பணிகளை தான் மேற்கொள்ள இருப்பதாகசெங்கோட்டையன் தெரிவித்தார்.