- Home
- Tamil Nadu News
- இபிஎஸ்க்கு முக்கியத்துவமா.? அதிமுகவில் போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன்- நடந்தது என்ன.?
இபிஎஸ்க்கு முக்கியத்துவமா.? அதிமுகவில் போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன்- நடந்தது என்ன.?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவுகள் அதிகரித்துள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமை ஏற்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இபிஎஸ்க்கு முக்கியத்துவமா.? அதிமுகவில் போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன்- நடந்தது என்ன.?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிரிவுகளாக பிளவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். அதிமுகவின் பிளவு காரணமாக தொண்டர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். இனி தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்றால் பிரிந்து சென்ற தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என கூறி வருகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனுக்கு மீண்டும் அதிமுகவில் இடமில்லையென உறுதியாக கூறிவருகிறார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல்
எடப்பாடி பழனிசாமியின் இந்த நிலைப்பாட்டால் அதிமுக மற்ற தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒற்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திகடவு திட்ட குழு சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
புறக்கணித்த செங்கோட்டையன்
இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெளிப்படையாக மூத்த தலைவர் செயல்பட தொடங்கியிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செங்கோட்டையன் கூறுகையில், அத்திக்கடவு- அவிநாசி திட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிற குழுவை சார்ந்தவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வந்து தன்னை சந்தித்தார்கள்.
புறக்கணித்தது ஏன்.?
அப்போது அவர்களிடம் நான் வைத்த வேண்டுகோள், எங்களை உருவாக்கிய புரட்சி தலைவர், புரட்சித்தலைவி அம்மாவுடைய திருவுருப் படங்கள் இல்லை. திட்டம் தொடர்பாக நிகழ்ச்சிக்கான அழைப்பிதல், பேனர்களில் படங்கள் இல்லையென கூறினேன். இந்த நிகழ்வுகள் தொடர்பாக முன்கூட்டியே என்னிடத்தில் கலந்து கொண்டு பேசியிருந்தால் உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பேன். நான் பல்வேறு இடங்களிலே இந்த பேனர்கள் வைக்கின்ற போது தான் எனக்கு கவனத்திற்கு வந்தது.
ஜெயலலிதாவிற்கு முக்கியம் இல்லையா.?
ஆகவே எங்களை ஆளாக்கிய தலைவருடைய படங்கள் இல்லை. அதே நேரத்தில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா இதற்காக நிதிகளை வழங்கினார். 3 கோடி 75 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கினார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம் அவர்களுக்கு திட்டங்களை ஆய்வு செய்ய உத்தரவு வழங்கினார்கள்.
ஆகவே இந்த பணிகளை துவங்கிய நேரத்திலும், துவங்குவதற்கு அடித்தளம் அமைந்திருக்கிறார். ஆகவே அவர்களுடைய படங்கள் இல்லை என்று நான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
அதிமுகவில் மீண்டும் மோதல்
நான் புறக்கணிக்கவில்லை அங்கே செல்லவில்லை. எனவே இது தொடர்பாக அவர்களின் கவனத்திற்கு நான் சொல்லி இருக்கிறேன் என செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் கூட்டத்தையே செங்கோட்டையன் புறக்கணித்திருப்பது அதிமுகவில் மீண்டும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே வேறு ஒரு கட்சியில் பொதுச்செயலாளர் நிகழ்வில் நிர்வாகி ஒருவர் புறக்கணித்திருக்க முடியுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.