இனியும் பொறுக்க முடியாது - காங்கிரஸ் நிர்வாகிகளை எச்சரிக்கும் செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், கட்சி விரோத செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

காங். மூத்த தலைவர்களை விமர்சிப்பதா.! இனியும் பொறுக்க முடியாது
காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி மோதல் என்றே கூறலாம். அதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு தலைவர்களும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் அனைவரையும் ஒற்றை தலைமையின் கீழ் கொண்டுவருவதற்கு பெரும் சிரமம் தான். இதன் காரணமாகவே பல தலைவர்கள் கட்சியை விட்டு ஓடிவிட்டனர்.
அந்த அளவிற்கு அடி தடி மோதல் என எதற்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ் அழகிரி 4 ஆண்டுகளுக்கு மேல் கட்சியின் தலைவராக இருந்த நிலையில் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.
காங்கிரஸ் உட்கட்சி மோதல்
அவர் பதவியேற்று ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையில், அவரின் செயல்பாடுகள் தொடர்பான வீடியோ கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகளை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் பாராட்டியிருந்தனர். அப்போது பேசிய செல்வப்பெருந்தகை தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடப்பதாக கூறியிருந்தார்.
இதனை விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூர் விமர்சித்திருந்தார். இதற்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்திருந்த நிலையில், சமூகவலைதளத்தில் தொடர்ந்து பல்வேறு காங்கிரஸ் மூத்த தலைவர்களையும், செல்வப்பெருந்தகையையும் விமர்சித்து தொலைக்காட்சி மற்றும் யூடியூப்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
செல்வப்பெருந்தகை அதிருப்தி
இது மட்டுமில்லாமல் செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லிக்கு 20க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் நேரில் சென்று புகார் தெரிவித்திருந்தனர். இதனால் மீண்டும் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீபத்தில் சில நாட்களாக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விஷயங்கள் குறித்து பொது ஊடகங்களில் பகிரங்கமாக கருத்து கூறப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக இயக்கம். கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு.
கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை
அதை கட்சிக்குள் பேசி தீர்த்துக்கொள்வது தான் நடைமுறையாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அத்தகைய நடைமுறைக்கு முற்றிலும் மாறாக தற்போது ஊடகங்களின் மூலமாக கருத்து கூறுவதையும், விரும்பத்தகாத நிகழ்வுகளையும் அனைவரும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் என் மீதான விமர்சனங்களை தாங்கிக் கொள்ளவும், எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .
அதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் குறித்து எத்தகைய விமர்சனங்களையும் அனுமதிக்க முடியாது. அவை கட்சி விரோத நடவடிக்கைகளாக கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்வதாக நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.