- Home
- Tamil Nadu News
- School Holiday: பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை.. மாணவர்கள் குஷி.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
School Holiday: பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை.. மாணவர்கள் குஷி.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
School Holiday: தமிழகத்தில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. தொடர் விடுமுறையையொட்டி தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்றுடன் (செப்டம்பர் 24) முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் அக்டோபர் 4 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. சில பள்ளிகளில் நாளை செப்டம்பர் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதலே விடுமுறை தொடங்குகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் 2 ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து மொத்தம் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வருவதால் மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.
சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
இந்த நிலையில், தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதால் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
அதாவது 25/09/2026 (வெள்ளிக்கிழமை] 26/09/2026 (சனிக்கிழமை பௌர்ணமி) மற்றும் 27/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை டூ நெல்லை, கோவை
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 25/09/2026 (வெள்ளிக்கிழமை] அன்று 1035 பேருந்துகளும், 26/09/2026 (சனிக்கிழமை) அன்று 760 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 25/09/2026 வெள்ளிக் கிழமை அன்று 210 பேருந்துகளும் 26/09/2026 சனிக்கிழமை அன்று 180 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, கும்பகோணம்
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 25/09/2026 மற்றும் 26/09/2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 145 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 27/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 875 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
எப்படி முன்பதிவு செய்வது?
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 14224 பயணிகளும் சனிக்கிழமை அன்று 6774 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9881 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது இனிமையான பயணத்தை மேற்கொள்ளலாம்.

