10 நாள் தான் டைம்! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய உத்தரவு!
தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 100% தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

தமிழக அரசு
School Education Department: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர். 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் தேர்வை எழுதினர்.
பள்ளி மாணவர்கள்
பொதுத்தேர்வு முடிவுகள்
அதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 4,113 மையங்களில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர். 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதை அடுத்து 10, 11 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதியும், 10, 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19ம் தேதியும் வெளியாக உள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்
பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு
இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: தமிழகத்தில் 3,088 உயர்நிலைப் பள்ளிகள், 3,174 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள்
10 நாட்களுக்குள் அறிக்கை
இதற்கிடையே 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக, பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சேகரிக்க வேண்டும். அவற்றை தொகுத்து இயக்குநரகத்துக்கு 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படாத வகையில் முதன்மை கல்வி அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.