வயதான தம்பதியை கடித்து குதறிய ராட்வீலர் நாய்.! சென்னையில் மீண்டும் பயங்கரம்
சென்னையில் ராட்வீலர் நாய் ஒன்று வயதான தம்பதியினரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் உரிமையாளர், பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Chennai dog attack : வீட்டில் பாதுகாப்பிற்காக நாய்கள் வளர்க்க மக்கள் ஆசைப்பட்டு பொம்மை வகை நாய்களை வளர்ப்பது ஒரு பக்கம் என்றால், பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்து கொலை செய்யும் நாய்களை சிலர் கெத்துக்காகவே வளர்த்து வருகின்றனர். தமிழக அரசு ராட்வீலர் உள்ளிட்ட 23 வெளிநாட்டு வகை நாய்களுக்கு தடை விதித்தது. இருந்த போதும் தடை செய்யப்பட்ட நாய்களால் பொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக பல முறை அரசு சார்பாக எச்சரிக்கை விடுத்தும் ஒரு சிலர் இது போன்ற நாய்கள் விரும்பி வளர்க்கும் நிகழ்வு தொடர்ந்து வருகிறது.
பொதுமக்களை கடித்த ராட்வீலர்
அதன் படி சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ராட்வீலர் நாய் கடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் அந்த சிறுமி பலத்த காயத்துடன் மருத்துவமனையில்சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாங்காடு பகுதியிலும் 11 வயது சிறுவன் ராட்வீலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் சென்னை மாநகராட்சி இதுபோன்று வெளிநாட்டு நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
முதியவரை கடித்த ராட்வீலர் நாய்
வெளியில் நாய்களை நடைப்பயிற்சிக்காக அழைத்து வரும்போது வாயைக் கட்டி அழைத்து வரவேண்டும் எனவும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் மாநகராட்சியின் விதிகளை மீறி தொடர்ந்து பல நாள் உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக குளத்தூர் புத்தாகரம் பகுதியில் ராட்வீலர் நாயை ஏவி விட்டு வயதான தம்பதியினரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாய் தொடர்பாக 75 வயதான தம்பதியினரான மாரியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர், நாய் உரிமையாளரிடம் முறையிட்ட போது ராட்வீலர் நாயை விட்டு கடிக்க விட்டுள்ளார்.
காவல்நிலையத்தில் புகார்
குறிப்பாக வயதான மூதாட்டி மீது ஏறி நின்று தொடர்ந்து நாய் கடிக்க முயன்றுள்ளது. வயதான மாரியப்பன் துணியையும் கடித்து இழுத்து நிர்வாணமாக்கி அவரை துரத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சத்தில் பயந்து ஓடும் வயதான தம்பதியினரை பாவம் கூட பார்க்காமல் நாய் கடித்துக் குதறி தாக்கிய போதும் நாயின் உரிமையாளர் வேடிக்கை பார்த்து தொடர்ந்து ஏவி விட்டுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று கூடி கேட்ட போதும் நாயை விட்டு மீண்டும் மிரட்டிய உரிமையாளர் தனக்கு காவல்துறை உயர் அதிகாரியையும் வழக்கறிஞர்களையும் தெரியும் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.