- Home
- Tamil Nadu News
- அடுத்த வாரம் கல்யாணம்! பத்திரிகை கொடுக்க சென்றபோது விபத்து! மாப்பிள்ளை, தாய், தந்தை பலி! தவெக நிர்வாகி எஸ்கேப்!
அடுத்த வாரம் கல்யாணம்! பத்திரிகை கொடுக்க சென்றபோது விபத்து! மாப்பிள்ளை, தாய், தந்தை பலி! தவெக நிர்வாகி எஸ்கேப்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த நாராயணன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பகண்டை கூட்டுச்சாலை பகுதியில் நேற்று மாலை திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் மார்கமாக சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சியின் கிழக்கு மாவட்ட பொருளாளர் சுந்தரமூர்த்தி ஓட்டிச்சென்ற காரும் அதேபோன்று சங்கராபுரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு வந்த நாராயணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நாராயணன் அவரது தந்தை ஆறுமுகம், தாய் செல்லியம்மாள் ஆகியோர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த நாராயணன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சேலம் அரசு கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நாராயணன் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பகண்டை கூட்டுச்சாலை போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் பயணித்து உயிரிழந்த நாராயணனுக்கு செப்டம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்து விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோர் விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய தவெக நிர்வாகியான கார் ஒட்டுநரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாப்பிள்ளை உயிரிழந்த செய்தியை கேட்ட பெண் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.