சரவணா ஸ்டோரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! கையும் களவுமாக சிக்கிய பெண்கள்!
போரூர் சரவணா ஸ்டோர்ஸில் இரண்டு பெண்கள் ரூ.30,000 மதிப்புள்ள கவரிங் நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சரவணா ஸ்டோர்
சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன. முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்டு எஸ்கலேட்டர், லிப்ட் வசதிகளுடன் இயங்கி வருகிறது. அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் இந்த கடைகளுக்கு விரும்பி வருகை தருகின்றனர். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் கூட்டம் சொல்ல முடியாத அளவுக்கு அலைமோதும்.
போரூர் சரவணா ஸ்டோர்ஸ்
இந்நிலையில் போரூரில் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 6வது மாடியில் கவரிங் நகைகள் விற்பனை செய்யும் பகுதி உள்ளது. அங்கு வந்த இரண்டு பெண்கள் கவரிங் நகைகளை பார்ப்பதுபோல், ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, வளையல், நெக்லஸ், ஆரம் உள்ளிட்ட கவரிங் நகைகளை திருடினர். சேலை அணிந்த வந்த இருவரும் உள்ளே அணிந்திருந்த பேண்டிற்குள் கவரிங் நகைகளை மறைத்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா
இதனை கண்காணிப்பு கேமரா வாயிலாக பார்த்த மேற்பார்வையாளர் ஊழியர்களுடன் சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் ரூமுக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து ரூ.30,000 மதிப்புள்ள கவரிங் நகைகளை பறிமுதல் செய்தனர்.
திருட்டில் ஈடுபட்ட பெண்கள்
இதனையடுத்து இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுவாதி (54) அவரது மகள் சொர்ணா (35) என்பதும் தெரியவந்தது. இவர்கள் ராமாபுரத்தில் தங்கியுள்ளதாக தெரிவித்தனர். ஏற்கனவே ரூ.75,000 மதிப்புள்ள மதிப்புள்ள கவரிங் நகைகளை திருடு முயன்ற போது ஊழியர்கள் எச்சரித்து அனுப்பியது தெரியவந்தது. இதனையடுத்து தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.