- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் நாளை முதல் SIR பணிகள் நடைபெறாது.. தேர்தல் ஆணையத்தின் தலையில் இடியை இறக்கிய அதிகாரிகள்..
தமிழகத்தில் நாளை முதல் SIR பணிகள் நடைபெறாது.. தேர்தல் ஆணையத்தின் தலையில் இடியை இறக்கிய அதிகாரிகள்..
தமிழகத்தில் நாளை முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட தேதிக்குள் SIR பணிகளை முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

SIRக்கு எதிர்ப்பு
பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன. நவம்பர் 4ம் தேதி தொடங்கிய இந்த பணிகளை டிசம்பர் 4ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் SIR பணிக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக இது தொடர்பாக தனி வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் உள்ள 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களிடம் 1 மாதத்தில் எப்படி விண்ணப்பங்களை கொண்டு சேர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
முறையான பயிற்சி இல்லை..
இந்நிலையில் SIR பணியில் ஈடுபட்டிருந்த வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இனி தேர்தல் ஆணையத்தின் SIR பணியில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. இந்த பணிகள் அனைத்தும் எந்தவிதமான பிழையும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் எங்களுக்கு இது தொடர்பாக எந்தவித பயிற்சியும் அளிக்கவில்லை.
அதீத பணிச்சுமை
பணிகளை முடிக்க அடுத்த மாதம் 4ம் தேதி வரை இருந்தாலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தினமும் 3 முறை வீடியோ காலில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது. SIR பணிகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுவதால் கடுமையான பணிச்சுமை ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
கூடுதல் அவகாசம் வேண்டும்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி கூடுதல் பணிகளை மேற்கொள்வதால் ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை நாளை முதல் புறக்கணிப்பதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு இன்று மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்து, நாளை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் SIR பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.