- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்! பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்! பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், வேகம் குறைந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதி கனமழை வரை ரெட், ஆரஞ்ச், மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த நிலையில் அதன் வேகம் குறைந்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 4 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரி தென் கிழக்கே 420 கி.மீட்டர் தொலைவில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் நவம்பர் 30ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு புதுச்சேரி அதை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தூத்துக்குடி, சிவகங்கை, அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மழை நிலவரம் பொறுத்து பல்வேறு மாவட்டங்களில் நாளை விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

