- Home
- Tamil Nadu News
- அன்புமணியின் அரசியல் வாழ்க்கைக்கு முழுக்கு போடும் தந்தை? டிஜிபி.யிடம் மனு அளித்த ராமதாஸ்
அன்புமணியின் அரசியல் வாழ்க்கைக்கு முழுக்கு போடும் தந்தை? டிஜிபி.யிடம் மனு அளித்த ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை முதல் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணத்தில் ஈடுபடவுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் மனு.

உரிமை மீட்பு பயணம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழவதும் நாளை (25ம் தேதி) தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த சமூக வலைதளப் பதிவில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை , 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை ,8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை , 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை , 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருகிறது.
உரிமை மீட்பு பயணம்
அந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும், அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நாளை மறுநாள் (ஜூலை 25-ஆம் நாள்) வெள்ளிக்கிழமை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தந்தை, மகன் இடையேயான மோதல்
இது ஒருபுறம் இருக்க பாமக.வில் ஏற்கனவே அப்பா, மகன் இடையேயான அதிகார மோதல் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நிறுவனரின் அனுமதி இல்லாமல் நடைபெறும் பயணம் என்பதால் இதற்கு காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது.
பாமக கொடியை பயன்படுத்த எதிர்ப்பு
மேலும் அன்புமணி பாமக கொடியை பயன்படுத்தக் கூடாது. உரிமை மீட்பு பயணத்தில் அன்புமணி பொதுமக்களை சந்திப்பதை தடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதனால் பாமக தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.