விஜய்யை அதிமுக பயன்படுத்தும்..! ராஜேந்திர பாலாஜி சொன்ன ராஜதந்திரம்
Rajendra Balaji, Admk: திமுக.வை வீழ்த்த விஜய் உட்பட அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் தென்காசி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய மக்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், திமுக அரசு திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு அறிவித்த எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை.
அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்துவோம்
எங்கு பிரச்சினை நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு அதை வைத்து அரசியல் செய்யும் கட்சியாக திமுக உள்ளது. அந்த வகையில் திமுகவின் நாடக வேஷம் கலைந்து நீண்ட நாட்கள் ஆகிறது. திமுகவை வீழ்த்த அதிமுக பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் உள்ளது. விஜய் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக விமர்சித்து பேசி வருகிறார்.
அந்த வகையில் நாங்கள் திமுகவை தோற்கடிக்க திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் அழைப்பதற்கு தயாராக உள்ளதாகவும், அதற்காக அதிமுக அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தும்.
கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்க வக்கில்லாத திமுக
கரூர் விவகாரத்தில், அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க திமுக அரசுக்கு வக்கில்லாத காரணத்தினால் எதிர் கட்சி கூட்டங்களை முடக்க நினைக்கிறது. மேலும் திமுகவிற்கு மக்கள் செல்வாக்கு குறைந்து வரக்கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்கள் மக்களை சந்திக்க விடாமல் நெருக்கடிகளை ஏற்படுத்தி, கூட்டத்தைக் கூட்டுவதற்கான நிபந்தனைகளை அதிகப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.