தேனியில் பெங்களூரு வியாபாரி கொலை: விஜய் கட்சி மாவட்ட செயலாளருக்கு தொடர்பா?
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்பவர் தேனியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். நடிகர் விஜய் கட்சியின் மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டியின் தோட்டத்தில் இக்கொலை நடந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் வியாபாரி கொலை
கர்நாடக மாநிலம் பெங்களூரு மடுவாலா பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40) இவருடைய சகோதரி ராதா என்பவரின் மகன் கலுவா (37) ஆகிய இருவரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் தங்கி இருந்து கண்ணாடி பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி திலீப், கலுவா ஆகிய இருவரையும் மர்ம கும்பல் தேனி பேருந்து நிலையம் அருகே வைத்து கடத்திச் சென்றது. போலி நகைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் நீங்கள் தானே எனக்கூறி அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தேனியில் தோட்டம்- அடித்து கொலை
இதனையடுத்து தேனி அருகே உள்ள நடிகர் விஜய் கட்சியின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி என்பவரின் தென்னந்தோப்பில் வைத்து தென்னை மட்டையாலும் சரமாரியாக தாக்கிய நிலையில், கலுவாவை அடித்து துரத்திவிட்டு, திலிப்பை அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார், முருகன், ஆகாஷ்,முத்துப்பாண்டி, சதீஷ்குமார், சௌமியன் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
விஜய் நிர்வாக தோட்டத்தில் கொலை
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திலீப்பை அடித்து கொலை செய்து பின்னத்தேவன்பட்டி அருகே உள்ள சர்க்கரைபட்டி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்ததாக தகவல் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் தேனி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார், குற்றவாளிகளில் ஒருவரான முருகன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டி புதைக்கப்பட்ட திலீப்பின் உடலை பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
லெப்ட் பாண்டி தோட்டத்தில் கொலை
இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சி மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தோட்டத்தில் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக கொலையாளிகள் திலிப்பை தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தோட்டத்தில் வைத்து அடித்து கொலை செய்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும், காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னரே லெப்ட் பாண்டி தோட்டத்தில் எதற்காக கொண்டு செல்லப்பட்டு அங்கே தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் ?
போலீசார் விசாரணை
லெப்ட் பாண்டிக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ் என விஜய் தொடர்ந்து அறிவுரை வழங்கி வரும் நிலையில் விஜய் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து பிரச்சனையில் சிக்குவது விஜய்யை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.