- Home
- Tamil Nadu News
- திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த பாமக.! தமிழக அரசியலில் திடீர் எதிர்பாரா திருப்பம்
திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த பாமக.! தமிழக அரசியலில் திடீர் எதிர்பாரா திருப்பம்
தமிழக அரசியலில் இரு துருவங்களாக பாமக- விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ள நிலையில், திடீர் திருப்பமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை வன்னியர் சங்க மாநாட்டில் பங்கேற்க பாமகவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

PMK invites Thirumavalavan : தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதுப்புது திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவோடு கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, இனி பாஜகவோடு கூட்டணி இல்லையென அறிவித்தது. 2026 சட்டமன்ற தேர்தலில் தனி அணியை உருவாக்குவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
ஆனால் அடுத்த சில வாரங்களிலையே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி பாஜகவோடு கூட்டணியை உறுதி செய்தார். இந்த பரபரப்பு திருப்பங்களுக்கு மத்தியில் தமிழக அரசியலில் மற்றொரு எதிர்பாரா திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது.
Vanniyar Sangam Conference
திருமாவிற்கு அழைப்பு விடுத்த பாமக
அந்த வகையில் எதிர் எதிர் துருவங்களாக அரசியல் களத்தில் திகழும் பாமக- திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மே 11-ம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்த பாமகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்களை பாமகவினர் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், வன்னியர் சங்க மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பங்கேற்குமாறு பாமகவினர் அழைப்பு விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Chithirai Full Moon Conference
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட திருமா
பாமகவினர் இன்று அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தனர். அப்போது வன்னியர் சங்க மாநாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் திருமாவளவனுக்கு சால்வை அணிவித்து அழைப்பிதழையும் கொடுத்துள்ளனர்.
இன்முகத்தோடு அழைப்பிதழை பெற்றுக் கொண்ட திருமாவளவன் மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். இதனிடையே சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாட்டிற்கான முகூர்த்த பந்த கால் நடும் விழா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
Anbumani
யாருக்கான மாநாடு- அன்புமணி
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, பட்டியல் இன சகோதரர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு யாருக்கும் எதிரானது கிடையாது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது. தமிழ்நாட்டில் யார் யார் மிகவும் பின்தங்கி இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும் அதற்காகத்தான் இந்த மாநாடு என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.