தூத்துக்குடியில் பிரதமர் மோடி! ரூ.4900 கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்தார்!
பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் விரிவுபடுத்தப்பட்ட விமான நிலையத்தைத் திறந்து வைத்து, ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் விரிவுபடுத்தப்பட்ட விமான நிலையத்தைத் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். சுமார் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்க வைத்துள்ளார்.
விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம்
மாலைத்தீவில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் இரவு 8 மணியளவில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விரிவுபடுத்தப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தின் திறப்பு விழா விழாவில் கலந்துகொண்டார். விழாவில் ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி விமான நிலைய பயணிகள் முனையம்
செட்டிநாடு கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய பயணிகள் முனையம் உள்ளிட்ட இடங்களையும் பிரதமர் பார்வையிட்டார்.
தமிழகத்தில் ரயில்வே துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,032 கோடி மதிப்பிலான பணிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,557 கோடி மதிப்பிலான பணிகள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ரூ.4500 கோடியில் திட்டங்கள் தொடக்கம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.548 கோடியில் 3 மற்றும் 4-வது உலையில் இருந்து மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் சுமார் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் உரையைத் தொடங்கிய மோடி, “இன்று கார்கில் போர் வெற்றி பெற்ற நாள். இன்றைய தினம் நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எனது அயல்நாட்டு பயணங்களில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.” என்றார்.
“பகவான் ராமர் மற்றும் முருகப்பெருமான் அருளால் தூத்துக்குடி வளர்ச்சியில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. 2014ஆம் ஆண்டிலேயே தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கான பயணம் தொடங்கிவிட்டது. ” எனவும் பிரதமர் மோடி கூறினார்.
திருச்சியில் மோடி
“இன்று ரூ.4,900 கோடி மதிப்பில் ரயில்வே, எரிசக்தி, சாலைகள், விமான நிலையம் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறிக்கொண்டே வருகிறது.” என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக அரசு சார்பில் கலந்துகொண்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டத்தின் மாதிரியை நினைவுச்சின்னமாக வழங்கினார்.
விழா முடிந்த பிறகு, இரவு 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அவர் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.