- Home
- Tamil Nadu News
- பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! புதிய பாடத்தை அறிமுகம் செய்த தமிழக அரசு- என்ன தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! புதிய பாடத்தை அறிமுகம் செய்த தமிழக அரசு- என்ன தெரியுமா.?
தமிழக பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உடற்கல்வி பாடமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 256 பக்கங்கள் கொண்ட புதிய பாடப்புத்தகம் மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரம் ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு என நேரம் ஒதுக்கப்பட்டும். இந்த நேரத்தில் மாணவர்கள் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடுவார்கள். மேலும் விளையாட்டு போட்டிக்கு பயிற்சி எடுப்பார்கள்.
அதிலும் ஒரு சில பள்ளிகளில் உடற்கல்விக்கு என நேரம் ஒதுக்கப்பட்டாலும் மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை விளையாடுவதற்கு அனுப்பாமல் அந்த வகுப்பிலும் பாடங்களை எடுப்பார்கள். இதனால் மாணவர்களுக்கு உடற்கல்வி தொடர்பான புரிதல் இல்லாத நிலை நீடித்து வந்தது. இதனையடுத்து பள்ளிகளில் உடற்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை மற்ற வகுப்புகள் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மாணவர்களுக்கு உடற்கல்வி பீரியட் போது விளையாட மட்டுமே செய்து வந்த நிலையில் தற்போது பாடமாக நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்விக்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித்துறை அச்சிட்டுள்ளது.
உடற்கல்வி பாடப்புத்தகத்தை நடப்புக் கல்வியாண்டிலேயே கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வந்தது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான உடற்கல்வி பாட புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 256 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாக அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என தனி தனி பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உடற்கல்வி பாடத்தின் முகவுரையில், பள்ளிக் கல்வித்துறையானது. மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஆற்றல் மிக்க உடற்கல்வித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முன்முயற்சி மாணவர்களின் உடல் தகுதியை அதிகரிப்பது. நற்பண்புகளை உருவாக்குவது. சமூகத் திறன்களை மேம்படுத்துவதோடு அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்திலும் அதனைத் தொடர்ந்து நிலவிய கட்டுப்பாடுகள் காரணமாகவும் மாணவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வழக்கமாக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிக்காக விளையாட்டுத் திடல்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்தது. இந்நிலையை மாற்ற, பள்ளி மாணவர்களுக்கு முறையான உடற்கல்விப் பாடத்திட்டத்தைச் செயல்படுத்திட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தற்போதைய நடைமுறைகளுக்கு ஏற்ப 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளத் தக்கவகையில் வளமான மாணவர்களை உருவாக்குவதற்கான ஒரு முன்முயற்சியாகவும் அமைந்துள்ளது.
புதிய ஆத்திசூடியில் "உடலினை உறுதி செய்" எனப் பாரதியார் உடல் நலத்தைப் பேண வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகிறார். உயர் நிலை வகுப்பு மாணவர்களிடையே நுண்தசை இயக்குத் திறனும், இயக்குநீர் (ஹார்மோன்) மாற்றமும் எற்படுகின்றன. எனவே இப்பருவத்தில் நரம்புத்தசை ஒருங்கிணைப்பு மற்றும் அடிப்படைத் திறன்களை மாணவர்களிடம் மேம்பாடு அடையச் செய்யவும், உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.
உடல் கல்வியறிவு, உடல் வளர்ச்சி. விளையாட்டுக் கல்வி, தமிழ் நாட்டுப்புற விளையாட்டுகள், மனமகிழ் விளையாட்டுகள், விளையாட்டு போட்டிகள், திட்டங்கள். ஆசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், விளையாட்டுக் காயங்கள். பாதுகாப்புக் கல்வி மற்றும் விளையாட்டுகளில் தொழில் வாய்ப்பு ஆகிய சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்பாடத் திட்டம் மாணவர்கள் விளையாட்டுத் திறன்களைப் பெறுவதற்கும் அவர்களின் பொறுப்புணர்வைச் சீரமைக்கவும் வழிவகுக்கும். மாணவர்கள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கவும், பதக்கங்களை வெல்லவும்.
சாதனை உணர்வை மேம்படுத்தவும். தங்களின் உடல் வலிமையை எண்ணிப் பெருமை கொள்ளவும் இத்திட்டம் வழிவகுக்கும். மேலும், மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்கும் இம்முயற்சியை முழுமனத்துடன் வரவேற்போம் என அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.