நறுக்குனா மட்டுமா? இப்போ விலைய கேட்டாலே கண்ணீர் வரும்: சதம் அடித்த வெங்காயம் விலை
வடமாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்த காரணத்தால் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை இன்று ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
Onion
காலை டிபனாக இருந்தாலும் சரி, பகல் மீல்ஸாக இருந்தாலும் சரி உணவில் வெங்காயத்தின் பங்கு இன்றி அமையாததாகிறது. சட்னி அறைப்பதில் தொடங்கி சாம்பார் வைப்பது வரை வெங்காயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் தங்கத்தின் விலை எப்படி நாளுக்கு நாள் கண்காணிக்கப்படுகிறதோ அதே போன்று வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்குத் தேவையான வெங்காயம் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருகிறது. தற்போது ஆந்திரர், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெங்காயத்தின் அறுவடை தற்போது தான் தொடங்கி உள்ளது என்பதால் இப்பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்துள்ளது. வரத்து குறைந்ததன் எதிரொலியாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
onion and garlic
பண்ணை பசுமை
அதன்படி மொத்த விற்பனையில் 1 கிலோ வெங்காயத்தின் விலை ரூ.70 முதல் ரூ.90 வரையில் விற்கப்படுகிறது. ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் விலை ஏற்றம் மக்களை பாதிக்காத வகையில் பண்ணை பசுமைக் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.73க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பூண்டு
இதே போன்று வடமாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பூண்டின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒருகிலோ பூண்டு ரூ.500 வரை விற்கப்படுகிறது. இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், அடுத்ததாக புது பூண்டு வருவதற்கு 1 முதல் 2 மாதகாலம் ஆகும் என்பதால் அது வரையில் பூண்டின் விலை சற்று அதிகமாகத் தான் இருக்கும். புது பூண்டு வந்தால் மட்டுமே விலை சற்று குறையும் என்று தெரிவித்துள்ளனர்.