- Home
- Tamil Nadu News
- மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அரசு குழு சொன்ன முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அரசு குழு சொன்ன முக்கிய அறிவிப்பு
அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழக அரசு அமைத்த குழு, செப்டம்பர் மாதத்தில் நான்கு கட்டங்களாக சங்கங்களின் கருத்துகளைக் கேட்க உள்ளது. இதன் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்
அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பது அரசு ஊழியர்கள் தான், அரசு என்ன தான் திட்டங்களை அறிவித்தாலும் மக்களுக்கு சென்றடைய அரசு ஊழியர்களின் பணி முக்கியமானது. அந்த வகையில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளும் அரசு நிறைவேற்றி வருகிறது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு சலுகையை மீட்டெடுத்தல்.
கோவிட் காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த சலுகை 15 நாட்கள் வரை பணப்பயனாக வழங்க வேண்டும். மேல்-நிலை பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உயர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமுறைகள், உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோரின் சம்பளத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்
ஆனால் அனைத்து கோரிக்கைகளையும் விட முக்கிய கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது தான். கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதேநேரம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 2004-ம் ஆண்டு ஜன1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே, கடந்த ஜனவரி 24-ம் தேதி மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களிடம் கருத்து கேட்பு
இந்த நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களையடுத்து பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி,
மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர் கே.ஆர்.சண்முகம் மற்றும் நிதித்துறை துணை செயலர் பிரத்திக் தயாள் ஆகியோர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் இறுதியில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
செப்டம்பரில் மீண்டும் ஆலோசனை
ஏற்கனவே 3 கட்டங்களாக அரசு ஊழியர்கள் சங்கங்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்ட நிலையில், விடுபட்ட சங்கங்கள் தங்கள் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் மாதத்தில் 4 கட்டங்களாக கருத்துக்களை கேட்கிறது.
செப்டம்பர் மாதத்தில் 3ஆம் தேதி, 4ஆம் தேதி, 11 தேதி மற்றும் 12ஆம் தேதி ஆகிய நாட்களில் பல்வேறு சங்கங்களிடம் கருத்துக்களைக் கேட்டு அதன் அடிப்படையில் அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் பாதுகாப்பு தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது