பழைய ஓய்வூதிய திட்டம்! உயர்நீதிமன்றத்தில் அரசு சொன்ன பதில்!
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தற்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரேடெரிக் ஏங்கெல்ஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 01.04.2003-க்கு பிறகு தமிழக அரசில் பணி வாய்ப்பு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அரசாணை எண்: 259, 06.08.2003-இன் படி நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இதுநாள் வரை இதற்கான விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை. மத்திய அரசு சாா்பில் கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது.
12 ஆண்டுகளாகியும் தமிழக அரசு இந்த ஆணைய விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. இதன் காரணமாக ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியாமல் பலர் உள்ளனர் என தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் தங்களது நிலைப்பாடு என்ன என்பதை மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக நிதித்துறை பதில் மனுவில் தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயலாக்குவதிலும், தீர்ப்பதிலும் எந்தத் தேக்கமும் இல்லை; சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணம் கேட்டு மொத்தம் 54,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றது. இதில் 51,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் எந்த தேக்கமும் இல்லை என்பதை காட்டுகிறது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று அரசின் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை டிசம்பர் 4-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

