- Home
- Tamil Nadu News
- பழைய ஓய்வூதிய திட்டம்.. நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.. குஷியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்!
பழைய ஓய்வூதிய திட்டம்.. நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.. குஷியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்!
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில், இதுகுறித்து முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 22ம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் தலைமையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 6-ம் தேதி முதல் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் கடந்த 30-ம் தேதி சமர்ப்பித்தனர். இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் பரிந்துரைகளின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே ஜனவரி 6ம் தேதி போராட்டம் அறிவித்துள்ள நிலையில் பழைய ஓய்வூதியம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ மற்றும் போட்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோருடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
நாளை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி அறிவிப்போம். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என போட்டா ஜியோ நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

