- Home
- Tamil Nadu News
- பனையூரில் செங்கோட்டையன் கேங்... அவரோடு தவெக-விற்கு தாவியது யார்... யார் தெரியுமா?
பனையூரில் செங்கோட்டையன் கேங்... அவரோடு தவெக-விற்கு தாவியது யார்... யார் தெரியுமா?
அதிமுக-வின் முக்கிய புள்ளியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு தவெக-வில் இணைந்திருக்கிறார்.

Sengottaiyan Joined in TVK
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருந்து வந்தவர் செங்கோட்டையன். அதிமுக ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பல அணிகளாக உடைந்து கிடக்கும் அதிமுக-வை ஒன்றிணைக்கும் வேலைகளில் ஈடுபட்டதால் செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனால் செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரவலாக இருந்தது.
செங்கோட்டையன் ராஜினாமா
இதையடுத்து, நேற்று தடாலடி முடிவெடுத்த செங்கோட்டையன், தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கையோடு, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் கொடுத்தார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து நேற்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் புது வீட்டிற்கு சென்றார். அங்கு விஜய்யை சந்தித்து அவருடன் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார் செங்கோட்டையன். இதன்மூலம் அவர் தவெக-வில் இணைவது உறுதியானது.
தவெக-வில் இணைந்த செங்கோட்டையன்
இந்த நிலையில் இன்று காலை சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்த செங்கோட்டையன், தவெக-வில் இணைந்தார். செங்கோட்டையனின் வரவால் தவெக-விற்கு பலம் கூடி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அவரின் அரசியல் அனுபவம் தவெக-விற்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக அலுவலகம் வந்த செங்கோட்டையனை ஆரத்தழுவி வரவேற்ற ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த், அவரை உள்ளே அழைத்து சென்றனர். பின்னர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் செங்கோட்டையன்.
தவெகவில் இணைந்தது யார்... யார்?
செங்கோட்டையனோடு மேலும் சில முக்கிய புள்ளிகளும் தவெக-வில் இணைந்திருக்கிறார்கள். முன்னாள் எம்பி சத்யபாமாவும் தவெகவில் இணைந்திருக்கிறார். அதோடு, அதிமுக-வின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளரான கந்தவேல் முருகனும் தவெகவில் இணைந்தார். மேலும், கோபிச்செட்டிபாளையம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த குறிஞ்சி நாதனும் விஜய் கட்சியில் இணைந்துள்ளார். நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளராக இருந்த சுப்பிரமணியம், மற்றும் முன்னாள் யூனியன் தலைவர்களான மௌடீஸ்வரன், பி.யூ.முத்துச்சாமி ஆகியோரும் தவெக-வில் இணைந்தனர். இதுதவிர அத்தாணி பேரூர் கழகச் செயலாளரான எஸ்.எஸ்.ரமேஷும் தவெகவில் இணைந்திருக்கிறார்.

