- Home
- Tamil Nadu News
- Sowmya Anbumani: “மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC.! சட்டப்பேரவையில் கொந்தளித்த சௌமியா அன்புமணி..!
Sowmya Anbumani: “மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC.! சட்டப்பேரவையில் கொந்தளித்த சௌமியா அன்புமணி..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக சௌமியா அன்புமணி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நிலம் வழங்கிய உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கொந்தளித்த சௌமியா அன்புமணி
தமிழ்நாட்டில் நிலம் வழங்கிய உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல், நுழைவுத் தேர்வு மூலம் வெளிமாநிலத்தவர்களை என்எல்சி நிறுவனம் தேர்வு செய்வதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் கடுமையாக குற்றம்சாட்டினார்.
மனசாட்சியே இல்லாமல் இயங்கும் நிறுவனம்
சட்டப்பேரவையில் சிறப்பு கவனயீர்ப்பின் மீது பேசிய அவர், “தமிழ்நாட்டிலேயே மனசாட்சியே இல்லாமல் இயங்கும் நிறுவனம் என்றால் அது என்எல்சி நிறுவனம்தான்” என விமர்சித்தார். விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தியதுடன், நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சி நிலத்தையும் பாதித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்கவில்லை
மேலும், தலைமுறை தலைமுறையாக அந்த பகுதியில் வசித்து வரும் மண்ணின் மைந்தர்களிடம் இருந்து நிலங்களை பெற்றுக்கொண்ட என்எல்சி நிறுவனம், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்காமல் நுழைவுத் தேர்வு நடத்தி வெளிமாநிலத்தவர்களை பணியில் சேர்ப்பதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். “மருத்துவப் படிப்புக்கு ஆள் எடுப்பது போல ஏன் நுழைவுத் தேர்வு நடத்துகிறீர்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
என்எல்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியான சிஎஸ்ஆர் நிதி முழுமையாக மக்களுக்கு பயன்படும் வகையில் செலவிடப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாக கூறினாலும், அவை பெரும்பாலும் நிறுவன வளாகத்திற்குள்ளேயே இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது
இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர், என்எல்சி நிறுவனம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் விவசாயிகள் பக்கமே இருக்கும் என்றும், அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்களே ஆன நிலையில், பிரச்சினையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக அரசு ஒருபோதும் செயல்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

