பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.மாணவர்கள் போராட்டம், பட்டியலின நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
மேகதாது அணை கட்டக்கூடாது.! பிரதமரை சந்தித்து தமிழக கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்
கர்நாடகாவில் வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள் என்றும், மாடு காணாமல் போனதைத் தேடி காட்டுக்குள் சென்றபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரம் கர்நாடகாவின் உள்நாட்டுப் பிரச்சனை எனக் கருத முடியாது என்றும், உலகின் எந்தப் பகுதியில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்போம் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்
காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். மேகதாது விவகாரம் தமிழக வெற்றிக் கழகத்துக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ மட்டுமே உரிய பிரச்சனை அல்ல; இது ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சனை என்று அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்து டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கர்நாடக அரசு கடந்த இரண்டு மாதங்களில் பலமுறை அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இதுபோன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சிக்கு அன்புமணி கேள்வி
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அரசியல் செய்து வருவதாக அன்புமணி விமர்சித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து டெல்லி சென்று தனது மாநிலத்திற்காக அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இதற்கு மாறாக செயல்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினார். அந்தமான் கிரேட் நிக்கோபர் திட்டத்தில் காடுகள் அழிக்கப்படுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் தலைமை, மேகதாது திட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி பாதிக்கப்படும் விவகாரத்தில் ஏன் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கிறது என்றும் அன்புமணி கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் போராட்டத்திற்கு எதிரான சுற்றறிக்கை தவறு
கல்லூரி கல்வித்துறை சார்பில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை குறித்தும் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த சுற்றறிக்கையை யார் அனுப்பியது என்பது குறித்து விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், உலகம் முழுவதும் மாணவர்கள் தங்களுடைய உரிமைகள் மற்றும் பிரச்சனைகளுக்காக போராடி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். தமிழுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டங்களும் தமிழக அரசியலில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் வகையிலான சுற்றறிக்கைகளை அரசு தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிகாரிகள் அரசை வழிநடத்தக் கூடாது
தற்போதைய அரசுக்கு போதிய நிர்வாக அனுபவம் இல்லாததை சில அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் அன்புமணி குற்றம்சாட்டினார். அதிகாரிகள் கூறுவதை மட்டுமே முதலமைச்சர் கேட்காமல், தனது மனசாட்சிப்படி மக்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பட்டியலின மக்களுக்கான நிதி ஒதுக்கீடு
புரட்சி பாரதம் கட்சி சார்பில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதையும் அன்புமணி வரவேற்றார். கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகவும் முறையாகவும் செலவிடப்படாதது தொடர்பான தரவுகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்றும், நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தேவை
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றுடன் தொடர்ந்து நீர் தொடர்பான பிரச்சனைகள் இருந்து வருகின்றன. கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, கர்நாடகாவுடன் காவிரி மற்றும் மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலுவான நடவடிக்கைகள் தேவை என்று அன்புமணி கூறினார்.
தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் அளவுக்கு மக்கள் தொகையும் பொருளாதார வளமும் கொண்ட மாநிலமாக உள்ளது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் உரிமைகள் மற்றும் வளங்களை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே முக்கியம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


