- Home
- Tamil Nadu News
- நெய்வேலி என்எல்சியில் பயங்கர தீ விபத்து! திணறும் தீயணைப்புதுறையினர்! கோடிக்கணக்கில் சேதம்!
நெய்வேலி என்எல்சியில் பயங்கர தீ விபத்து! திணறும் தீயணைப்புதுறையினர்! கோடிக்கணக்கில் சேதம்!
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தின்போது மின்மாற்றியில் ஏற்பட்ட கசிவால் டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நெய்வேலி என்எல்சி
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்.எல்.சி. இந்நிறுவனம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ளது. இங்கு 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக பல்வேறு மாநிலங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த என்எல்சி மையத்தில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் தீ விபத்து சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது.
டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து
இந்நிலையில் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தின்போது மின்மாற்றியில் எற்பட்ட கசிவால் டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக கொழுந்துவிட்டு எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத்துறை
3 மணி நேரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்துவரும் நிலையில் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கவும் தீயணைப்புத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், கோடிக்கணக்கில் பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல வௌி மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.