- Home
- Tamil Nadu News
- தமிழ்நாட்டில் ஒரு மினி மாலத்தீவு... வெறும் 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க..!
தமிழ்நாட்டில் ஒரு மினி மாலத்தீவு... வெறும் 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க..!
மாலத்தீவு செல்ல வேண்டும் என்கிற கனவோடு இருப்பவர்கள் முதலில் தமிழ்நாட்டில் உள்ள மினி மாலத்தீவுக்கு சென்று வர வேண்டும். அந்த அழகிய தீவு பற்றி பார்க்கலாம்.

Mini Maldives in Tamilnadu
கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. இந்த விடுமுறையில் எங்கு சுற்றுலா செல்லலாம் என்று தான் அனைவரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக ஒரு சூப்பர் ஸ்பாட் தமிழ்நாட்டில் உள்ளது. சொல்லப்போனால் இந்த இடத்துக்கு சென்றால் மாலத்தீவுக்கு சென்றது போல இருக்கும். அந்த அளவுக்கு ரம்மியமான அழகோடு கூடிய ஒரு தீவு தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த தீவுக்கு செல்ல படகு சவாரிக்கு வெறும் ரூ.300 வசூலிக்கப்படுகிறது. செல்லும் வழியில் டால்பின் மீன்களையும் பார்க்க முடியும். அந்த தீவை பற்றி பார்க்கலாம்.
அந்த தீவு எங்கு இருக்கிறது?
மன்னார் வளைகுடாவின் வளமான கடல் சூழலுக்குள் அமைந்துள்ள குருசடைத் தீவு தான் அது. தனது நீல நிறத்த்தில் தெளிவான நீரும் வெண்மணல் கடற்கரையும் காரணமாக “தமிழகத்தின் மாலத்தீவு” என இது அழைக்கப்படுகிறது. இயற்கை மற்றும் கடல்சார் உயிரியல் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு இத்தீவு ஒரு அரிய அனுபவத்தை வழங்கும். சமீப காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள இந்தத் தீவு, அமைதியான கடல் சூழலை ரசிக்க விரும்புவோரின் விருப்பப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
குருசடை தீவில் என்னென்ன பார்க்கலாம்?
மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளில் குருசடைத் தீவு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு காணப்படும் கடல் நீர் மிகவும் தூய்மையானதுடன், கண்ணாடியைப் போன்ற தெளிவுடையது. இதனால் கடலுக்கடியில் உள்ள பவளப்பாறைகள் மேலிருந்தே தெளிவாகக் காண முடிகிறது. பாதுகாக்கப்பட்ட உயிரியல் வளமாக உள்ள இந்தப் பகுதி, பல அரிய கடல்வாழ் உயிரினங்களின் தாயகமாக திகழ்கிறது. கடல் பசுக்கள், டால்பின்கள் மற்றும் பல்வேறு வண்ணமயமான மீன் இனங்கள் இங்கு காணப்படுகின்றன. கடலடித் தாவரங்களும் உயிரினங்களும் உலகளாவிய ஆய்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
எப்படி செல்வது?
ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குந்துகால் கடற்கரையிலிருந்து குருசடைத் தீவிற்கு படகு சேவை இயக்கப்படுகிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் இந்தச் சுற்றுலா நடைபெறுகிறது. பயணிகள் முதலில் குந்துகாலில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து, நுழைவுச்சீட்டு மற்றும் படகு அனுமதி பெற வேண்டும்.
இந்தத் தீவிற்கு தனியார் படகுகள் அனுமதிக்கப்படாது. வனத்துறை ஏற்பாடு செய்துள்ள படகுகள் மூலமாக மட்டுமே பயணம் செய்ய முடியும். கடலின் ஆழம் குறைவான பகுதிகளில் படகு செல்லும் போது, பயணிகள் பவளப்பாறைகள் மற்றும் மீன்களின் இயற்கை அழகைக் கண்டு மகிழ முடியும். பொதுவாக காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை படகு சேவை நடைபெறும். எனினும், கடல் நிலை மற்றும் வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப நேரங்களில் மாற்றம் இருக்கலாம்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தீவு
பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், சுற்றுலாப் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள், மதுபானங்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பவளப்பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைத் தொடுதல் அல்லது சேதப்படுத்துதல் சட்டவிரோதமாகும். பயணிகள் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வனத்துறை வழிகாட்டிகள் பயணிகளுடன் இருந்து, அப்பகுதியின் சிறப்புகளை விளக்குகின்றனர். இயற்கையை காக்கும் நோக்கமே இந்தச் சுற்றுலாவின் முக்கிய அம்சமாகும்.
குருசடைத் தீவிற்குச் செல்ல ஏற்ற காலமாக அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள காலம் கருதப்படுகிறது. இக்காலத்தில் வானிலை இலகுவாகவும் கடல் அமைதியாகவும் இருக்கும். கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காணப்படுவதால், அதிகாலை நேரங்களில் பயணம் செய்வது சிறந்தது. மழைக்காலங்களில் கடல் சீற்றம் அதிகரித்தால் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.
தமிழகத்தில் இத்தகைய அழகிய கடல் தீவு இருப்பதை பலரும் அறியாமல் இருக்கலாம். ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் திட்டத்தில் குருசடைத் தீவையும் இணைத்துக் கொண்டால், இயற்கை நிறைந்த மறக்க முடியாத அனுபவத்தை பெற முடியும். கடலின் அமைதியையும் இயற்கையின் செழிப்பையும் ரசிக்க விரும்புவோருக்கு இந்தத் தீவு ஒரு சிறந்த ஸ்பாட்டாக திகழ்கிறது.

