- Home
- Tamil Nadu News
- வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் உதவித் தொகை.. எவ்வளவு தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி?
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் உதவித் தொகை.. எவ்வளவு தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி?
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகள் பதிவு செய்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்குகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து ரூ.200 முதல் ரூ.1000 வரை உதவித்தொகை பெறலாம்.

தமிழக அரசு அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு தொழில் நிறுவனங்களை தமிழக முழுவதும் தொடங்கி வருகிறது. இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இருந்த போதும் வேலை இல்லாதவர்களுக்கு உதவிடும் வகையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருப்பவர்கள் உதவித்தொகை பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரர்கள் வரும் மார்ச் 31ம் தேதி, 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாதந்தோறும் 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவருக்கு ரூ. 200, தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.300, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சிக்கு ரூ.600, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000ம் வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்; அல்லது https://employmentexchange.tn.gov.in/ இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கூடாது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படாது. மனுதாரர்கள் விண்ணப்பங்களை வரும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

