- Home
- Tamil Nadu News
- சென்னையில் உச்சகட்டம்.. ஒரே இரவில் கூண்டோடு அழிக்கப்பட்ட குடும்பம்.. திமுகவுக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சி
சென்னையில் உச்சகட்டம்.. ஒரே இரவில் கூண்டோடு அழிக்கப்பட்ட குடும்பம்.. திமுகவுக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சி
சென்னையில் காவலாளியாகப் பணியாற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், அவரது மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் அரசின் அலட்சியத்தின் விளைவு என வேல்முருகன் கூறியுள்ளார்.

மனைவியிடம் மர்ம நபர்கள் அத்துமீறல்
சென்னையில் உச்சகட்டக் கொடூரமாக தாய், தந்தை இருவரையும் இழந்து அழுதுகொண்டிருந்த இரண்டு வயது பச்சிளம் குழந்தையும் கூட, இரக்கமின்றி கொலை செய்யப்பட்டது இது ஒரு விபத்து அல்ல. இது பாதுகாப்பற்ற அரசு அமைப்புகளின் அலட்சியத்தின் விளைவு என திமுக கூட்டணியை சேர்ந்த தலைவர் வேல்முருகன் காட்டமாக கூறியுள்ளார்.
வேலை தேடி… வாழ்வாதாரம் தேடி… தமிழ்நாட்டை வந்தடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர். மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தையுடன் சென்னைத் தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாகப் பணியில் சேர்ந்து, அதே கல்லூரி வளாகத்திலேயே குடும்பத்துடன் தங்கி வாழ்ந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியிடம் மர்ம நபர்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து மனைவியை காக்க முயன்ற ஒரே காரணத்திற்காக, கொடூரமாக தாக்கப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார் அந்த இளைஞர்.
மனைவி பாலியல் வன்கொடுமை
அதோடு, அவரது மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டுள்ளார். உச்சகட்டக் கொடூரமாக, தாய், தந்தை இருவரையும் இழந்து அழுதுகொண்டிருந்த இரண்டு வயது பச்சிளம் குழந்தையும் கூட, இரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளது. மூன்று உயிர்கள்… ஒரு குடும்பம்… ஒரே இரவில் பூண்டோடு அழிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இளைஞர் மற்றும் அவரது மனைவியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி, அடையாறு , இந்திரா நகர் ஆற்றங்கரை ஓரத்திலும். குழந்தையின் உடலை வேறு இடத்திலும் வீசிக் குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். இளைஞர் மற்றும் குழந்தையின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தாயின் உடல் தேடப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற அரசு அமைப்புகளின் அலட்சியம்
இந்தச் சம்பவம், ஒரு தனிப்பட்ட குற்றம் அல்ல. இது ஒரு விபத்து அல்ல. இது பாதுகாப்பற்ற அரசு அமைப்புகளின் அலட்சியத்தின் விளைவு. இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஏற்கனவே தமிழ்நாடு அரசின் முன் வைத்து, தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் பின்வரும் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இன்று இந்த மூன்று உயிர்கள் உயிரோடு இருந்திருக்க முடியும். வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல தமிழ்நாட்டிலும் உள் நுழைவு சீட்டு (Inner Line Permit) முறை. ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் வடமாநிலத்தவர்கள் ஒப்பந்த காலம் முடிந்தவுடன் வெளியேறுகிறார்களா? என்பதை உறுதி செய்யும் கடுமையான கண்காணிப்பு அமைப்பு.
ஒப்பந்தத் தொழிலாளர்கள்
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் வளாகத்திலேயே பாதுகாப்பான குடியிருப்பு வசதி வழங்க ஒப்பந்ததாரர்களை கட்டாயப்படுத்துதல். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் குறைந்தபட்சம் 90% வேலைவாய்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கே. தமிழ்நாடு அரசுத் துறைகளில் 100% “தமிழக வேலை தமிழருக்கே” என்பதைச் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்துதல். 2014 க்கு பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய எந்தவொரு வடமாநிலத்தவருக்கும், வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற தீர்மானத்தை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புதல். அது மட்டுமல்ல. இந்தியப் பெருநிலம் என்பது ஒரே மொழி, ஒரே இன, ஒரே பண்பாட்டால் உருவானதல்ல. பல மொழிவழி தேசிய இனங்கள், பல பண்பாட்டு அடையாளங்கள், பல சமூகங்கள் இணைந்த ஒன்றே இந்தியா.
தனி நபர்கள் மட்டும் காரணம் அல்ல
அந்தந்த மொழிவழி தேசிய இனங்களின் சொந்த நிலப்பரப்புகளிலேயே, அவர்களுக்குரிய தரமான கல்வி, நியாயமான வேலைவாய்ப்பு, உற்பத்தி வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருந்தால், இன்று பிற மொழி வழி தேசிய இனத்தை சேர்ந்த இளைஞர்கள், குடும்பங்கள், பச்சிளம் குழந்தைகள், தத்தமது இரத்தச் சொந்தங்களை, நிலங்களை, வீடுகளை விட்டு, வாழ்வாதாரம் தேடி பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து அலைந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. பஞ்சம் பிழைக்கப் பாதுகாப்பற்ற வாழ்வைத் தேடி, அந்நிய நிலங்களில் அடையாளமற்ற உயிர்களாக வாழ வேண்டிய நிலையும் உருவாகியிருக்காது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு, சில தனி நபர்கள் மட்டும் காரணம் அல்ல.
வேல்முருகன்
தேசிய இனங்களின் உரிமைகளைப் புறக்கணித்து, ஒன்றிய அரசு திணிக்கும் மையப்படுத்தப்பட்ட வளர்ச்சிக் கொள்கைகள் என்ற பெயரில் வீழ்ச்சிக் கொள்கைகள் ஏற்படுத்தும் மனித விரோத விளைவுகளே இவை. ஒருபுறம், தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு உரிமையும், சமூக சமநிலையும் சீரழிக்கப்படுகிறது. மற்றொரு புறம், வடமாநிலங்களின் இளைஞர்கள் சொந்த மண்ணில் வாழ முடியாமல், உயிர் பாதுகாப்பற்ற சூழலில் கட்டாயமாக இடம்பெயரத் தள்ளப்படுகின்றனர். இந்த இரட்டை அநீதியையும் முடிவுக்கு கொண்டு வர, மாநில உரிமைகளையும், தேசிய இனங்களின் உயிர் உரிமைகளையும், ஒரே நேரத்தில் பாதுகாக்கும் அரசியல் தீர்வே அவசியம். இதை அந்தந்த மாநிலங்களில் உள்ள தேசிய இனங்கள் முடிவு செய்வதே சரியான தீர்வைத் தர முடியும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

