15 மாவட்டங்களில் மிரட்டப்போகுது மழை.! சென்னையை புரட்டிப்போட்ட வானிலை- வெதர்மேன் அலர்ட்
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை கனமழை கொட்டித் தீர்த்தது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
Rain
சென்னையில் கொட்டித்தீர்த்த மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை மிதமான மழை பெய்த நிலையில் இன்று காலை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அண்ணாநகர், கொளத்தூர், அம்பத்தூர் பகுதிகளில் கொட்டித்தீர்த்தது. இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், 1 மணி நேரத்திற்குள் 100 மிமீ மழையானது அண்ணா நகர் மேற்கு. கொளத்தூர், அம்பத்தூர், கொரட்டூர், முகப்பேர், பாடி, வளசர்வாக்கம் ஆகிய இடங்களில் பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
tamilnadu heavy Rain
தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை
இதனிடையே தமிழகத்தில் மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது மேலும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று (30.10.2024) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,
உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
Tamil nadu rains
15 மாவட்டங்களில் கன மழை
நாளை 31.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
01.11.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
rain in chennai
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
30.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான- கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
31.10.2024 (தீபாவளி தினம்): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.