- Home
- Tamil Nadu News
- பாஜகவை கை கழுவிய நிலையில் மீண்டும், மீண்டும் ஸ்டாலினை சந்திக்கும் ஓபிஎஸ்.! நடந்தது என்ன.?
பாஜகவை கை கழுவிய நிலையில் மீண்டும், மீண்டும் ஸ்டாலினை சந்திக்கும் ஓபிஎஸ்.! நடந்தது என்ன.?
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் , முதலமைச்சர் ஸ்டாலினை 24 மணி நேரத்தில் 3 முறை சந்தித்து பேசியுள்ளார்.

ஜெயலலிதா மறைவு- அதிமுகவில் அதிகார மோதல்
அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு பிறகு முக்கிய தலைவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயல்லிதா மீதான வழக்கு காரணமாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டபோதும் முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம், கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளை சந்தித்துள்ளது.
முதலில் அதிமுகவை கையகப்படுத்திய சசிகலா, சிறைக்கு செல்ல நேரிட்டதால் எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி மற்றும் ஆட்சியை ஒப்படைத்தார். ஆனால் அடுத்து அடுத்து நடைபெற்ற நிகழ்வுகளை தொடர்ந்து சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தை சேர்த்துக்கொண்டார்.
நிராகரித்த அதிமுக- கை விட்ட பாஜக
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சியை இழ்ந்த அதிமுகவில் உட்கட்சி மோதல் மீண்டும் அதிகரித்தது. ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற முழக்கத்தால் மீண்டும் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பல கட்ட சட்ட போராட்டங்களை நடத்திய ஓபிஎஸ், இறுதியாக பாஜகவிடம் சரண் அடைந்தார். பாஜக எப்படியாவது தன்னை அதிமுகவில் இணைத்து விடும் என காத்திருந்தார்.
ஆனால் பாஜகவோ எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி அமைத்து ஓ.பன்னீர் செல்வத்தை கைவிட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர் செல்வம் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். நேற்று ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஸ்டாலினோடு ஓபிஎஸ் சந்திப்பு
அடுத்ததாக விஜய்யின் தவெகவா.? சீமானா.? திமுகவா.? என்ற கேள்வி எழுந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் கடந்த 24 மணி நேரத்தில் 3 முறை சந்தித்து பேசியுள்ளார்.
நேற்று காலை அடையாறு பகுதியில் நடைபயிற்சி சென்ற முதலமைச்சரை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் பேசிய நிலையில், நேற்று மாலை முதலைமச்சர் இல்லத்திற்கே ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் ஓ.பி.ரவிந்திரநாத் ஆகியோர் சென்றனர். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து மறைவு மற்றும் முதலமைச்சர் உடல்நிலை தொடர்பாக கேட்டறிந்ததாக தெரிவித்தார்.
3வது முறையாக ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்
மேலும் திமுகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா.? என்ற கேள்விக்கு அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லையென தெரிவித்தார். மேலும் விஜய் தரப்பில் இருந்து நாங்களும் தொடர்பு கொள்ளவில்லை, அவர்களும் எங்களிடம் பேசவில்லையென கூறினார். இந்த சூழ்நிலையில் இன்று காலை முதலைமச்சர் ஸ்டாலினை மீண்டும் .ஓபன்னீர் செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.
இன்று காலை நடைபயிற்சியின் போது இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் செலுத்தி விட்டு அந்த இடத்தில் இருந்து நடைபயிற்சியை தொடர்ந்துள்ளனர். எனவே தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியலில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.