செங்கோட்டையன் அல்லது எஸ் பி வேலுமணியை முதல்வர் ஆக்குவதே பாஜகவின் திட்டம் என்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

DMK's Anwar Raja Criticized BJP: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் இந்த கூட்டணி அமைந்தது முதல் பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அதிமுக, பாஜக கூட்டணி

தமிழ்நாட்டை விரோத போக்குடன் நடத்தும் பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டதாகவும், பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்து விட்டதாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. மேலும் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் அமித்ஷா சொல்வதைத்தான் எடப்பாடி பழனிசாமி கேட்க வேண்டும் என பாஜக நிபந்தனை விதித்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

திமுகவில் இணைந்த அன்வர் ராஜா

அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது பிடிக்காமல் அக்கட்சியின் மூத்த தலைவர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், அந்தக் கூட்டணி அதிமுகவுக்கு பாதகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பாஜகவின் நோக்கமே அதிமுகவை அழிப்பதுதான் என்றும், அதை உணராமல் அதிமுக தலைமை கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.

பாஜகவின் திட்டம் இதுதான்

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற தனது கருத்தை கட்சித் தலைமையிடம் பலமுறை தெரிவித்ததாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்காமல் சிலரின் நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் அன்வர் ராஜா கூறியிருந்தார். இந்நிலையில், தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டியளித்த அன்வர் ராஜா, பாஜகவின் திட்டம் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது இல்லை என தெரிவித்தார்.

செங்கோட்டையன் அல்லது வேலுமணி

இது தொடர்பாக பேட்டியில் பேசிய அன்வர் ராஜா, ''2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அதிமுகவில் இருந்து ஒருவர் முதல்வர் ஆவார் என்று அமித்ஷா சொல்கிறாரே தவிர, எடப்பாடி பழனிசாமி பெயரை அவர் எங்கும் சொல்லவில்லை. ஆகவே பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் செங்கோட்டையன் அல்லது எஸ்.பி வேலுமணிக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கும். பாஜக கூட்டணி முதல்வராக, பாஜக சொல்வதை அப்படியே கேட்கும் ஒருவரே முதல்வராக இருக்க முடியும் என்பதே பாஜகவின் எண்ணம். ஆனால் முதல்வர் யார்? என்பதை அதிமுக தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, பாஜக அல்ல''என்று தெரிவித்தார்.