திரிஷாவுக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு... மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்-நீதிமன்றம் அதிரடி
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பரத்திற்காகவும் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறிய நீதிபதி, மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்ததோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக உத்தரவிட்டார்.
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்ட முன்னனி நடிகர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் செய்தியாளர் சந்திப்பில் நடிகை திரிஷா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். லியோ படத்தில் திரிஷாவுடன் எந்த வித கற்பழிப்பு காட்சியும் இல்லையென கூறியிருந்தார். மேலும் பல நடிகைகள் பற்றியும் பேசியிருந்தார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து மன்சூர் அலிகான் பேச்சிற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார். இதே போல நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளத்தில் கருத்து பதிவு செய்திருந்தனர்.
இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த மன்னிப்பை திரிஷாவும் ஏற்றுக்கொண்டு மன்சூர் அலிகான் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசில் தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த ஒரு சில தினங்களில் நான் நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லையென்றும், தனது பிஆர்ஓ தவறாக செய்தி கொடுத்துவிட்டதாக கூறியிருந்தார். இதனையடுத்து திரிஷா தொடர்பாக தான் பேசிய வீடியோவின் முழு தொகுப்பை வெளியிட்டவர், தான் யாரையும் தவறாக பேசவில்லை.
எனவே எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த 3 பேருக்கும் எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக மன்சூர் அலிகான் குற்றச்சாட்டினார்.
அப்போது மூன்று பேருக்கும் எதிராக ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியாது. தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு மன்சூர் அலிகான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதாக திரிஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி சதீஸ்குமார், மன்சூர் அலிகானின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே மூவரும் எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதனை அவதூறாக கருத முடியாது என கூறினார்.
mansoor alikhan
மேலும் பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு. மேலும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக தெரிவித்த நீதிபதி, அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுபோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.