- Home
- Tamil Nadu News
- புஸ்ஸி ஆனந்தால் தவெகவில் வெடித்த கலகம்..! விஜய்யின் 'தளபதி'க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ரசிகர்கள்!
புஸ்ஸி ஆனந்தால் தவெகவில் வெடித்த கலகம்..! விஜய்யின் 'தளபதி'க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ரசிகர்கள்!
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்துக்கு எதிராக அக்கட்சியினர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து முழுமையாக பார்ப்போம்.

தவெகவில் உட்கட்சி பூசல்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தமிழக அரசியலில் பெரும் கூட்டணி மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதேபோல் தவெகவின் உட்கட்சி பூசல்களையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ''என்னடா.. கட்சி இப்பதான் முளைத்து இன்னும் வளர கூட ஆரம்பிக்கல.. அதுக்குல்ல தவெகவில் கலகமா?'' என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. கரூர் சம்பவம் நடந்தவுடன் சென்னை சென்று பதுங்கிக் கொண்ட தவெக தலைவர் விஜய், இன்னும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்
இதேபோல் தவெக நிர்வாகிகள் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா என அனைவரும் தலைமறைவாயினர். இதில் கைதுக்கு பயந்து கிட்டத்தட்ட 16 நாட்கள் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த், உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றியதால் வெளியே வந்தார்.
வந்தவுடன் அவர் நேராக விஜய்யை சந்தித்து கரூர் விவகாரத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும்? தவெகவின் எதிர்கால திட்டங்கள் என்னென்ன? ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
புஸ்ஸி ஆனந்துக்கு தவெகவினர் எதிர்ப்பு
இத்தனை நாள் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்தை திமுக, நாம் தமிழர் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் ஆச்சரியமில்லை. ஆனால் தவெகவினரே ''இவர் ஏன் திரும்ப வந்தார்'' என புஸ்ஸி ஆனந்தை விமர்சிப்பது தான் பெரும் ட்விஸ்டே.
விஜய்யின் உயிர், தளபதியின் தளபதி என புஸ்ஸி ஆனந்தை நோக்கி பயர் விட்டு கொண்டிருந்த தவெகவினர் சிலர் அவருக்கு எதிராக திரும்பியதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
விஜய்யின் வலது கரம் ஆனந்த்
விஜய்யை கட்சி ஆரம்பிக்க சொன்னது, அவருக்கு ஆலோசனை கொடுத்தது எல்லாம் புஸ்ஸி ஆனந்த் தான். இதனால் தான் விஜய் கட்சியின் பொதுச்செயலாளராக அவரை நியமித்தார். தவெக தொடக்கம் முதல் கட்சியின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஏற்பாடுகளை செய்து வந்தது அவர் தான்.
இவர் பேச்சை விஜய் தட்டுவதில்லை. விஜய்யின் சனிக்கிழமை சுற்றுப்பயணத்திலும் இடங்களை ஏற்பாடு செய்வது, காவல்துறை அனுமதி பெறுவது என அனைத்து வேலைகளையும் புஸ்ஸி ஆனந்தே செய்து வந்தார்.
நிர்வாகி மீது பழி போட்டு தப்பினார்
ஆனால் கரூர் சம்பவத்துக்கு பிறகு அவர் விஜய்யை அம்போனு விட்டு சொன்னது தவெக தொண்டர்களை கோபமடையச் செய்துள்ளது. கரூர் சம்பவத்தில் தான் மாட்டிக் கொள்ள கூடாது என முடிவெடுத்த புஸ்ஸி ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் தான் ஏற்பாடுகளை எல்லாம் செய்தார் என பழியை அவர் மீது போட்டு தலைமறைவானார். பின்பு கைதுக்கு பயந்து வெளியேவே வரவில்லை.
கட்சி தலைவருக்கு இது அழகல்ல
ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் கட்சிக்கு எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். ஆனால் புஸ்ஸி ஆனந்த் விஜய் தன்னை நம்பி ஒப்படைத்த பிரசார ஏற்பாடுகளையும் சரியாக செய்யவில்லை.
சம்பவம் நடந்தவுடன் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல் கட்சி நிர்வாகி மீது பழியை போட்டு விட்டு ஓடி விட்டார். அது மட்டுமின்றி சம்பவத்துக்கு பிறகும் 'என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம், என்ற மனநிலையோடு அவர் சட்டத்தையும் எதிர்கொள்ள முடியாமல் தலைமறைவானதை தவெகவினர் ரசிக்கவில்லை.
பொறுப்பை தூக்கி கொடுத்த விஜய்
மேலும் தலைமறைவில் இருந்து வெளியே வந்த புஸ்ஸி ஆனந்தை விஜய் இன்முகத்துடன் வரவேற்றதும், தான் கரூர் செல்லும் ஏற்பாடுகளை கவனிப்பதற்கு புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைத்ததும் தவெகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.
தான் வைத்த நம்பிக்கையை காப்பாற்றாத புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் நடவடிக்கை எடுப்பார் அல்லது அவரை சந்திப்பதை தவிர்ப்பார் என தவெகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் விஜய் இதை ஏதும் செய்யாமல் மீண்டும் மீண்டும் புஸ்ஸி ஆனந்தை முழுமையாக நம்புவது கட்சிக்குள் எதிர்ப்பலையை உண்டாக்கியுள்ளது.
கலகத்தை எப்படி சமாளிக்க போகிறார் விஜய்?
இந்த கோபத்தை விஜய் ரசிகர்களும் தவெகவினரும் சமூகவலைத்தளம் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். ''விஜய் மீண்டும் புஸ்ஸி ஆனந்தை நம்புவது தவறு. அவரை நம்பினால் தேர்தலில் வெற்றி பெறுவது கஷ்டம் தான்'' என தவெகவினர் கூறி வருகின்றனர்.
''தாடி பாலாஜி சொல்வது சரி தான். விஜய் தனக்கு விசுவாசமாக இருப்பவர்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். புஸ்ஸி ஆனந்தை தூக்கி எறிய வேண்டும்'' என ஒரு சில விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக கட்சிக்குள் ஏற்பட்ட கலகத்தை விஜய் எப்படி சமாளிக்க போகிறார்? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.