- Home
- Tamil Nadu News
- 2026 தேர்தலில் விஜய் தான் ஓட்ட அள்ளப்போறாரு.. அடித்து சொல்லும் காங்கிரஸ் தலைவர்..
2026 தேர்தலில் விஜய் தான் ஓட்ட அள்ளப்போறாரு.. அடித்து சொல்லும் காங்கிரஸ் தலைவர்..
TVK Vijay: 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் கணிசமான வாக்குகளை வாங்கி குவிக்கப் போகிறார் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

கடும் விமர்சனத்திற்கு உள்ளான விஜய்
கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் எதிர்மறை விமர்சனங்களை சந்திக்கத் தொடங்கிய தவெக தலைவர் விஜய், தற்போது பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் அவரது வெற்றி தொடர்பாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆலோசனைகளை வழங்கிய தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் பீகார் மாநிலத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார்.
படுதோல்வி அடைந்த பிரஷாந்த் கிஷோர்
மொத்தமாக 238 தொகுதிகளில் போட்டியிட்ட PKவின் ஜான் சுராஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. மேலும் அந்த கட்சியால் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே டெபாசிட் தொகையை தக்கவைக்க முடிந்தது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம், NDA, ஜான் சுராஜ் இடையே தான் போட்டி என்று சொல்லிவிட்டு இப்படிப்பட்ட படுதோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சி நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரஷாந்த் கிஷோர் நிலை தான் விஜய்க்கும்..?
பீகாரில் பிரஷாந்த் கிஷோர் படுதோல்வியை சந்தித்ததைப் போன்றே தமிழகத்தில் விஜய்யும் படுதோல்வியை சந்திப்பார் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தவெகவின் வாக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு இருக்கும் மாஸ் PKக்கு கிடையாது..
இது தொடர்பாக அவர் கூறுகைளில், “2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தமிழகம் முழுவதும் கணிசமான வாக்குகளை வாங்கி குவிப்பார். பிரஷாந்த் கிஷோரையும், விஜய்யையும் ஒப்பிட முடியாது. விஜய் ஒரு மிகப்பெரிய பிரபலம். அவரை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் டிரான்ஸ்பார்மர்கள் மீது ஏரி நிற்கும் அளவிற்கு அவர் மீது தீவிரமாக இருக்கின்றனர். ஆனால் அதுபோன்ற வரவேற்பு பிரஷாந்த் கிஷோருக்கு இல்லை.
நல்ல பயிற்சியாளர், சிறந்த வீரராக மாட்டார் என்பதற்கு PK தான் உதாரணம்
ஒரு நல்ல பயிற்சியாளர், சிறந்த வீரராக மாட்டார் என்பதற்கு உதாரணம் பிரஷாந்த் கிஷோர். எனவே விஜய் கணிசமான வாக்குகளை வாங்குவார். ஆனால் அந்த வாக்கு வாக்கு, சீட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவர் யாருடன் கூட்டணி அமைக்கிறார், அவர் கூட்டணியில் யார் சேர்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் விஜய்யின் வெற்றி அமையும்.
Confident about align with TVK for 2026
pic.twitter.com/vbOjT6FvzC— Suresh samy (@sureshsamy28) November 20, 2025
மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் அதிமுக..
மேலும் பாஜக உடன் கூட்டணி அமைத்த பின்னர் அதிமுகவில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மாறாக இந்த கூட்டணியை ஏற்காமல் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் திமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு செல்கின்றனர். வரக்கூடிய தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றாலும் அதில் ஆச்சரியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்”.

