- Home
- Tamil Nadu News
- CM Vijay Cabinet : முதல்வர் விஜய்யின் கேபினட்டில் அமைச்சராக அரியணை ஏறிய 4 சிங்கப்பெண்கள் யார்... யார்?
CM Vijay Cabinet : முதல்வர் விஜய்யின் கேபினட்டில் அமைச்சராக அரியணை ஏறிய 4 சிங்கப்பெண்கள் யார்... யார்?
women Ministers in CM Vijay Cabinet : முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், அதில் 4 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

women Ministers in CM Vijay Cabinet
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டது. கடந்த மே 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உட்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அந்த அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ மட்டும் இடம்பெற்று இருந்தார். அவர் வேறுயாருமில்லை, சிவகாசி தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வான 29 வயதான செல்வி எஸ். கீர்த்தனா தான்.

அமைச்சரவை விரிவாக்கம்
இந்நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு தவெக அரசு அமைச்சரவையை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் 23 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன் மூலம் கூட்டணி கட்சிகளுடனான அரசியல் சமநிலையையும் நிர்வாக வலிமையையும் அதிகரிக்க தவெக அரசு முயற்சி மேற்கொள்கிறது.
நான்கு பெண் அமைச்சர்கள்
உயர்கல்வி, வேளாண்மை, வருவாய், போக்குவரத்து, சமூக நலன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகள் இதுவரை அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததால், இந்த அமைச்சரவை விரிவாக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், இன்று நடைபெற்ற விழாவில் மூன்று பெண் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுனர். ராஜபாளையம் தொகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி, அவினாசி தொகுதியின் கமலி மற்றும் குமாரபாளையம் தொகுதியின் விஜயலக்ஷ்மி ஆகியோர் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள். ஏற்கெனவே கீர்த்தனா தொழில்துறை அமைச்சராக உள்ள நிலையில், இந்த புதிய நியமனங்களின் மூலம் தவெக அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
அமைச்சரவை பலம் எவ்வளவு?
தமிழ்நாடு அமைச்சரவையின் மொத்த பலம் 35. இப்போதைய விரிவாக்கத்தையும் சேர்த்து, 33 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இதில், 21 பேர் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-க்கள், 2 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முதலமைச்சர் விஜய் மற்றும் 9 எம்.எல்.ஏ-க்கள் ஏற்கனவே மே 10-ம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இது ஒரு "மதச்சார்பற்ற முற்போக்கு அரசாங்கம்" என்று அவர்கள் பாராட்டியுள்ளனர்.

