- Home
- Tamil Nadu News
- உங்க 2 பேருக்கும் மன்னிப்பே கிடையாது.. சேகர்பாபு சொல்லி அப்படி செஞ்சீங்களா.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆவேசம்!
உங்க 2 பேருக்கும் மன்னிப்பே கிடையாது.. சேகர்பாபு சொல்லி அப்படி செஞ்சீங்களா.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆவேசம்!
வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதவர்களை அப்படியே விட முடியுமா? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாது குறித்து ஏன் எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்யவில்லை? என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இரண்டு முறையும் அவர் உத்தரவிட்டும் மனுதாரர் ராம ரவிக்குமார் மலையில் தீபம் ஏற்ற தமிழக காவல்துறை மறுத்து விட்டது. தனி நீதிபதியின் உத்தரவால் சட்டம், ஒழுங்கு சீரழிந்து விடும் என தமிழக அரசு குற்றம்சாட்டி மறுப்பு தெரிவித்து விட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இதனால் மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை காவல் ஆணையர் லோக நாதன், மதுரை காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி இவர்களையும் அனைவரையும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
அதன்பேரில் இன்று (ஜனவரி 9) மேற்கண்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காணொலி வாயிலாக ஆஜராகினார்.
இந்த இருவரையும் மன்னிக்க முடியாது
அப்போது பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை ஆட்சியரையும், நீதிமன்றம் சொல்லியும் 144 தடை உத்தரவை ரத்து செய்யாத மதுரை துணை ஆணையரையும் மன்னிக்கவே முடியாது'' என்றார்.
அமைச்சர் சேகர்பாபு தான் சொன்னாரா?
தொடர்ந்து நீதிபதி, ''நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டாம் என சேகர்பாபு (இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்) சொன்னாரா? அவர் சொல்லி தான் இப்படி செஞ்சிங்களா? என்று கேட்டார். அதற்கு மதுரை துணை ஆணையர் இனிகோ திவ்யன், ''இது நானாக சுயமாக எடுத்த முடிவு'' என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதவர்களை அப்படியே விட முடியுமா?
திங்கட்கிழமை நடவடிக்கை
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாது குறித்து ஏன் எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்யவில்லை?முழுமையாக ஒரு மாதம் அவகாசம் இருந்தும் எழுத்துப்பூர்வ பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை'' என்றார்.
அதற்கு தமிழக அரசு சார்பில், அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து திங்கட்கிழமை தெரிவிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

