- Home
- Tamil Nadu News
- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்துக்கு தடை.. நீதிமன்றம் அதிரடி.. தமிழக அரசிடம் காட்டமான கேள்வி!
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்துக்கு தடை.. நீதிமன்றம் அதிரடி.. தமிழக அரசிடம் காட்டமான கேள்வி!
சென்னை புத்தகக் கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக எழுதப்பட்ட புத்தகம் ஒன்று காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த புத்தகத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இரண்டு முறை உத்தரவிட்டு இருந்தார். ஆனால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விடும் எனக்கூறி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதி அளிக்கவில்லை. ஆனால் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற கிளை இரு நீதிபதிகள் அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை இறுதி செய்தது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பொங்கிய திமுகவினர்
இதற்கிடையே தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பல்வேறு அமைப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என காட்டமாக விமர்சித்தார். மேலும் திமுக, இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டு வந்து மக்களவை சபாநாயகரிடம் வழங்கினார்.
ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்
இந்த நிலையில், சென்னை புத்தகக் கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக எழுதப்பட்ட புத்தகம் ஒன்று காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை ஆர்.எஸ்.அமைப்புடன் தொடர்புபடுத்தி எழுதப்பட்ட இந்த புத்தகத்தை கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நீதிபதிக்கு எதிரான இந்த புத்தகத்தை விற்பனை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதிக்கு எதிரான புத்தகத்துக்கு தடை
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்துக்கு தடை விதித்து அதனை பறிமுதல் செய்ய நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். நீதிபதிக்கு எதிராக புத்தகம் எழுதியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ''நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் அவரை கொச்சைப்படுத்தும் வகையில் மிக மோசமாக உள்ளது. கிடைத்தவற்றை வைத்து எழுதிய இந்த புத்தகத்தை எப்படி அனுமதித்தீர்கள்?'' என தமிழக அரசிடம் காட்டமான கேள்வி எழுப்பினார்கள்.
புத்தகம் விற்பனைக்கு வராது
அதற்கு தமிழக அரசு, ''சென்னை புத்தக கண்காட்சியை தமிழக அரசு நடத்தவில்லை. பபாசி தான் நடத்துகிறது. நீதிபதிக்கு எதிரான புத்தகம் விற்பனைக்கு வராது'' என்று கூறியுள்ளது. பின்பு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் இது தொடர்பான விரிவான விளக்கம் அளிக்கக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

