பாஜகவை கை கழுவுகிறதா பாமக.! புதிய கூட்டணியா.? ராமதாஸ் வெளியிட்ட பதிவுக்கு காரணம் என்ன.?
தமிழகத்தில் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மாறிவரும் நிலையில், பாமகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்த யூகங்கள் எழுந்துள்ளன. மத்தியில் பாஜக ஆட்சியமைத்தும் பாமகவிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால், கூட்டணியில் இருந்து விலகலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராமதாஸின் சமீபத்திய பதிவு இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது.
POLITICS
தமிழகத்தில் அரசியல் கட்சிகள்
தமிழகத்தில் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியானது மாறி வருகிறது. அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளலாக அரசியல் கட்சிகள் திமுக மற்றும் அதிமுகவுடன் மாறி, மாறி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. இரு கட்சிகளுக்கும் கொள்கைள் வேறு வேறாக இருந்தாலும் தேர்தல் சமயத்தில் ஓட்டுக்காக கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் திராவிட கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக ஆட்சி அமைத்து வருகிறது. அந்த கட்சிகளை எதிர்த்து கட்சி தொடங்கியவர்கள் கடைசியாக அந்த கட்சியிடமே கூட்டணி வைக்கும் நிலை உருவாகிவிடும். இப்படி பல கட்சிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
பாமகவின் கூட்டணி
அந்த வகையில் பாமகவானது திமுக- அதிமுக- பாஜக என கட்சிகளோடு ஒவ்வொரு தேர்தலும் மாறி, மாறி கூட்டணி அமைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்கு முன்பாக அதிமுக- பாஜக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய பாமக, கடைசியில் பாஜக கூட்டணியில் இணைந்தது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 9 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
மீண்டும் கூட்டணி மாறுகிறதா பாமக
தருமபுரி தொகுதியில் மட்டும் சவுமியா அன்புமணி டெபாசிட் பெற்றார். தேர்தலுக்கு முன்பாகவே பாஜக கூட்டணிக்கு பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் வாக்குகள் கிடைக்காது என வலியுறுத்தி இருந்தனர். அதனையும் மீறி கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி தோல்வியாக அமைந்த நிலையிலும் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது. எனவே அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என ராமதாஸ் காத்திருந்தார். ஆனால் எந்த வித சாதகமான பதிலும் வரவில்லை. இந்த நிலையில் தான் ரயில்வே வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை அன்புமணிக்கு மத்திய அரசு வழங்கியது.
ராமதாஸ் பதிவிற்கு காரணம் என்ன.?
மத்திய அமைச்சராக இருந்த அன்புமணிக்கு ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை மட்டும் வழங்கியதை பாமக தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பாமக நிறுவனர் ராமதாஸ் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே’ என்று எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். எனவே விரைவில் உள்ளாட்சி மன்ற தேர்தல் அடுத்ததாக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதைத்தான் மறைமுகமாக கூறியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கண்டுகொள்ளாத பாஜக
இது தொடர்பாக பாமக வட்டராத்தில் கூறுகையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தும் பாமகவிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே இந்த கூட்டணியில் தொடர்ந்து நீடித்தால் எந்த வித பயனும் இல்லை, வாக்குகளும் குறையும் நிலை உருவாகும் என கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த பதிவை வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்த போதும் எதற்காக ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே’என்ற தகவலை பதிவிட்டார் என்ற குழப்பமான நிலை நீடித்து வருகிறது.