VIJAY: ரஜினியை போல் பின்வாங்குகிறாரா விஜய்.? ஒரு மாநாடு கூட நடத்த முடியாமல் திணறுவது ஏன்.?
திரையுலகில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்துள்ள நடிகர் விஜய், தனது புதிய கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் மூலம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார். இருப்பினும், கட்சி கொடி, சின்னம் தொடர்பான சர்ச்சைகள், திட்டமிட்டபடி மாநாடு நடைபெறாதது என தொடரும் தடங்கல்கள் அவரது அரசியல் பயணம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.
karunanidhi jayalalitha
தமிழகத்தில் திராவிட கட்சி தலைவர்கள்
திரைத்துறையில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய், நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய், நாளை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக மட்டுமே மாறி, மாறி ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளது.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் என தமிழகத்தில் முதலமைச்சர் நாற்காழியில் அமர்ந்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளனர். திமுக, அதிமுகவிற்கு எதிராக அரசியல் கட்சிகள் தொடங்கியவர்கள் எல்லாம் முதல் ஒரு 10 ஆண்டுகள் தங்களால் முடிந்த அளவிற்கு தனியாக நின்று போட்டி கொடுப்பார்கள்.
Thalapathy vijay
அரசியல் களத்தில் விஜய்
ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் யாரை எதிர்க்க கட்சியை தொடங்கினார்களோ அந்த கட்சியோடு கூட்டணி அமைக்க வரிசையில் காத்திருக்கும் நிலை தான் தமிழகத்தில் நீடித்து வருகிறது. இந்தநிலையில் திராவிட கட்சி தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா மறைந்த பிறகு தற்போது மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த கால கட்டம் தான் சரியாக இருக்கும் என அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் விஜய், முதலும் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் என கட்சியின் பெயரை பதிவு செய்தார். ஆனால் அடுத்த ஒரு சில நிமிடங்களிலையே கட்சியின் பெயர் தவறாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
ஆரம்பமே சறுக்கல்
தமிழக வெற்றிக் கழகம் என்று தான் இருக்க வேண்டும் க் என்ற வார்த்தை மிஸ் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து மீண்டும் தேர்தல் ஆணையத்தில் க் என்ற வார்த்தை சேர்த்து தமிழக வெற்றிக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது.
இதுவும் ஆரம்பத்திலையே சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியானது கேரள அரசின் போக்குவரத்து துறையின் சின்னம், டால்மியா சிமெண்ட் விளம்பரம் என விமர்சிக்கப்பட்டது. அடுத்ததாக தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் விஜய்க்கு எதிராக புகார் தெரிவித்தது.
கட்சி கொடிக்கு எதிர்ப்பு
யானை சின்னம் எங்களது சின்னம் எனவும், எனவே விஜய் தனது கட்சி கொடியில் இருந்து யானை சின்னத்தை நீக்க வேண்டும் என புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு கட்சியின் சின்னத்தை மற்றொரு கட்சி கொடியில் இடம்பெற செய்வது நாகரீகமற்றது என விமர்சித்திருந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியை அறிவித்தார். அதன் படி செப்டம்பர் 22ஆம் தேதி என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக செப்டம்பர் 23ஆம் தேதி என மாற்றப்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் மாநாட்டிற்கான இடம் தேடிய விஜய் கடைசியாக விக்கிரவாண்டியை தேர்வு செய்தார்.
மாநாடும் போலீஸ் அனுமதியும்
மாநாட்டிற்காக காவல்நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. மாநாடு நடைபெறவுள்ள இடத்தை பார்வையிட்ட போலீசார் 33 கேள்விகளை விஜய் கட்சிக்கு அனுப்பி வைத்தனர். குறிப்பாக மாநாடு நடைபெறும் நேரம் என்ன.? மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள், மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகள் என்ன என கேள்வி கேட்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக பதில் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் 21 நிபந்தனைகளை விதித்து மாநாட்டிற்கு அனுமதி அளித்தனர். மாநாட்டிற்கு அனுமதி அளித்து ஒரு வாரம் கடந்த நிலையில் இன்னும் மாநாட்டிற்கான பணிகள் தொடங்கவில்லை. அந்த பகுதியில் உள்ள புற்களை கூட வெட்டவில்லை. எனவே மாநாடு திட்டமிட்டபடி செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறவில்லையென்பது உறுதியாகிவிட்டது. புதிய தேதி தொடர்பாகவும் எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
திணறுகிறாரா விஜய்?
கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய் அடுத்தடுத்து அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் சைலண்ட் மோடில் உள்ளார். எனவே மீண்டும் எப்போது மாநாடு நடத்தப்படும். அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டால் ஒரு வேளை மழை பாதிப்பு ஏற்பட்டால் சிக்கல் உருவாகும். எனவே மாநாட்டை ஜனவரி மாதம் நடத்தலாமா.? என்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அரசியல் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு முதல் கட்ட தலைவர்கள் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை யாரும் இல்லாமல் அரசியலில் என்ன செய்வது என்று தெரியாமல் விஜய் திணறுவதாக கூறப்படுகிறது. மேலும் மாநாடு நடத்த பல கோடி ரூபாய் செலவு ஏற்படும் இதனை செலவழிப்பது தொடர்பாகவும் பல குளறுபடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அரசியலுக்கு வந்தது சரியா.? தவறா என யோசிக்கும் நிலையில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.