தலைமைக்கே தெரியாமல் கேரளாவில் திமுக கட்சி உதயம்; பின்னணியில் யார்?
கேரளாவைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ பி.வி.அன்வர், திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக திமுக தலைவர்களை சந்தித்துள்ள அவர், முதல்வர் ஸ்டாலினையும் சந்திக்க நேரம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் டிஎம்கே என்ற பெயரில் அன்வர் தனியாக கட்சியை தொடங்கியுள்ளார்.
திமுகவும் அரசியலும்
தமிழகத்தில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக திமுக மக்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்து உள்ளது. சுமார் 35ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்திலும் இருந்துள்ளது. அந்த வகையில் பாரம்பரிய மிக்க திமுகவானது தமிழகத்தை தாண்டி புதுச்சேரியில் மட்டும் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கர்நாடகா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட இடங்களில் பெயரளவில் உள்ளது. ஆனால் திமுகவிற்கே தெரியாமல் கேரளாவில் ஒரு எம்எல்ஏ உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவல்கள் தான் கடந்த சில நாட்களாக ஹாட் டாபிக்காக உள்ளது. கேரள மாநிலம் நிலம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் பி.வி.அன்வர். .
P Sasi, PV Anwar, ADGP
பினராயிக்கு எதிராக எம்எல்ஏ
காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக இருந்தாலும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கேரளாவில் உள்ள ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியின் ஆதரவுடன் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு மலப்புரத்தில் உள்ள நிலம்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரள முதல்வர் பினராயி விஜயனோடு கருத்து மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பினார். இதன் காரணமாக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார். மேலும் தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் 40க்கு 40 தொகுதிகளை ஸ்டாலின் பெற்றுள்ளார்.
PV Anwar
திமுகவில் சேர விரும்பிய கேரள எம்எல்ஏ
ஆனால் பாஜகவிற்கு கேரளாவில் ஒரு சீட்டை விட்டுக்கொடுத்து பினராயி விஜயன் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார் என விமர்சித்தார். மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மதச்சார்பின்மை பாதுகாவலராக இருப்பதாக கூறினார். தொடர்ந்து புகழந்து பேசிய அன்வர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது அதற்கு ஏற்றார் போல் பொதுக்கூட்டத்திலும் பேசி வந்தார். இந்தநிலையில் தான் திமுகவில் இணைந்து கேரளாவில் திமுக எம்எல்ஏ என சட்டமன்றத்தில் பதிவு செய்ய அன்வர் திட்டமிட்டார். இதற்காக தமிழகம் வந்தவர் திமுகவின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியானது.
திமுகவின் பதில் என்ன.?
இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கவும் அன்வர் நேரம் கேட்டார். ஆனால் அன்வரை கட்சியில் சேர்த்தால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணியில் பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் முதலமைச்சர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியில் இணைப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்வர் கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக நிர்வாகிகளிடம் கேட்ட போது, கடிதம் எழுதியிருக்கலாம் என்றும், ஆனால் முதல்வருக்கு அது கிடைக்கவில்லை கூறினர். மேலும் கூட்டணி கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சேர்த்து கொள்வதில் திமுகவிற்கு விருப்பம் இல்லையெனவும் தெரிவித்தனர். இதனிடையே எம்எல்ஏ அன்வர் டிஎம்கே என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அதாவது டெமாக்ரடிக் மூவ்மென்ட் ஆஃப் கேரளா என்ற பெயரில் கட்சியானது உதயமாகியுள்ளது.