- Home
- Tamil Nadu News
- ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு.! திமுகவிற்கு விடாமல் குடைச்சல் கொடுக்கும் விசிக- ஸ்டாலின் ஷாக்
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு.! திமுகவிற்கு விடாமல் குடைச்சல் கொடுக்கும் விசிக- ஸ்டாலின் ஷாக்
திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு குறித்து விசிக பேசியுள்ளது. அதிமுக வலுவான அணியை அமைத்தால் திமுகவிற்கு பின்னடைவு ஏற்படும். விஜய்யின் தவெகவின் நிலைப்பாடு கேள்வியாக உள்ளது.

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு.! திமுகவிற்கு விடாமல் குடைச்சல் கொடுக்கும் விசிக
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பிடித்துள்ளது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாகவே கருதப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முதல் 2025ஆம் ஆண்டு ஈரோடு இடைத்தேர்தல் வரை தொடர் வெற்றி பெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த கூட்டணி வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என எதிர்பார்க்க தொடங்கியுள்ளது.
திமுக- அதிமுக கூட்டணி
அதே நேரம் திமுகவும் 200 தொகுதிகளை இலக்காக கொண்டு அரசியல் செய்து வருகிறது. அந்த வகையில் 200 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தை களம் இறங்க திட்டமிட்டுள்ளது. இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் கொடுக்க முடியாது என மறைமுகமாகவே கூறி வருகிறது. அதே நேரம் திமுகவிற்கு எதிராக அதிமுக வலுவான அணியை அமைக்க காய் நகர்த்தி வருகிறது. அதன் படி விஜய்யின் தவெக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை இணைக்க கணக்கு போடுகிறது.
தவெக கூட்டணி நிலைப்பாடு என்ன.?
எனவே இந்த புதிய கூட்டணி அமைந்தால் திமுகவிற்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக விஜய்யின் தவெகவிற்கு தற்போதே 15% வாக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவிற்கு 25 முதல் 30 சதவிகித வாக்குகளும், பாமக மற்றும் தேமுதிகவின் வாக்குகளும் எளிதாக அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பை உருவாக்கி விடும். ஆனால் தவெகவின் நிலைப்பாடு தான் இன்னமும் கேள்வியாக உள்ளது. தவெக தலைமையில் கூட்டணியா.? அதிமுக தலைமையில் கூட்டணியா என்ற குழப்பம் தான் தொடர்ந்து நீடித்து வருகிறது.
திமுகவிற்கு குடைச்சல் கொடுக்கும் விசிக
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா ஆட்சியில் பங்கு தொடர்பாக தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்து வந்தார். இந்த நிலையில் மற்றொரு துணை பொதுச்செயலாளரான வன்னி அரசு ஆட்சியில் பங்கு தொடர்பாக முக்கிய தகவல் கூறியுள்ளார்.
அதன் படி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நாலுமூலைக்கிணறு கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வன்னி அரசு பேசுகையில், 2026 ல் தேர்தல் வரப்போகிறது. தேர்தல் வரப்போகிறது என்றால் என்ன பொருள்.
ஆட்சியில் விடுதலை சிறுத்தைகள்
2026 தேர்தலில் நடக்கின்ற தேர்தலில் ஆட்சியிலே அதிகாரத்திலேயே பங்கு பெறக்கூடிய இடத்திலே விடுதலை சிறுத்தைகள் வலிமை பெற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் அமர வேண்டும். அண்ணன் திருமாவளவன் அவர்கள் முதல்வராக வரவேண்டும். இதுதான் நமது கனவு. தலைவர் ஒருநாள் நிச்சயம் முதல்வராக வருவார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 1990 ஆம் ஆண்டு தலைவர் விசிக கொடியே ஏற்றும் போது இந்த கொடி விரைவில் கோட்டையில் பறக்கும் என்றார்.
விசிக ஆட்சிக்கு வர வேண்டும்
இப்போது நாம் கோட்டைக்கு நமது கொடி கட்டி தான் செல்கிறோம். கோட்டைக்குள் கொடி கட்டிக் கொண்டு செல்லும் இயக்கமாக நமது இயக்கத்தை மாற்றியுள்ளார் நமது தலைவர். ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் நமது கனவு என அம்பேத்கர் கூறியுள்ளதாகவும் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.