Kodaikanal Tourists: கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய செய்தி!
Kodaikanal Tourists: கொடைக்கானலின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கப்படும்.
கொடைக்கானல் கோடை விடுமுறைக்கு பிரபலமான கோடை வாசஸ்தலமாகும். 7200 அடி கடல் மட்டத்திற்கு மேல் உயரம் கொண்டது. தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மற்றும் பழநி மலையின் ஒரு பகுதியாக உள்ளது. மலைகளின் இளவரசி என எல்லோராலும் அழைக்கப்படுகிறது. குளிர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதியாக இருப்பதால் ஆண்டு முழுவதும் மக்களை மிகவும் கவரும் பகுதியாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஏரி, நீர்வீழ்ச்சி புல்வெளிகள், பிரையண்ட் பூங்கா ஆகியவை உள்ளன. மேலும் மிதிவண்டியில் செல்வதும், குதிரைகளில் செல்வதும் மிகவும் மக்களைக் கவர்கிறது.
வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் குணா குகை, மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
குறிப்பாக கோடை காலங்களில் மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானலில் முகாமிடுவார்கள். இதனால் கோடைக்காலங்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர் பாட்டில்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் இல்லா பசுமை கொடைக்கானலை உருவாக்க, கொடைக்கானல் மலைப் பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் பிளாஸ்டிக் பாட்டில் விற்பனை செய்யும் தனிநபர், வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி கூறுகையில்: கொடைக்கானலுக்கு சீசன் மட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டம், மாநிலம், நாடுகளிலிருந்து வருகின்றனர். இதமான குளுமையும், இயற்கை எழிலும் நிரம்பிய கொடைக்கானல் மலையின் பசுமையை, சுற்றுச்சூழலை காக்க, பிளாஸ்டிக் இல்லா பசுமை கொடைக்கானலை உருவாக்குவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதை பயன்படுத்தும், விற்பனை செய்யும் தனிநபர், வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் – குளிர்பான பாட்டில்கள் வைத்திருத்தல், பயன்படுத்துதல், விற்பனை செய்தல் போன்றவற்றிற்கு பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 அபராதம் விதிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.