- Home
- Tamil Nadu News
- Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகுமா? தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை!
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகுமா? தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை!
Government Employee: 20 ஆண்டுகளாகப் போராடி வரும் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்
அரசு ஊழியர்களின் நியாயமான பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அரசின் முதுகெலும்பாக திகழும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எவ்வித நிபந்தனையும் இன்றி நிறைவேற்றினால், அரசு இயந்திரம் சரியான திசையில் இயங்கும். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
புதிய ஓய்வூதிய திட்டம்
2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் (NPS - சிபிஎஸ்) அமல்படுத்தப்பட்டது. தற்போது மொத்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களில் சுமார் 70 சதவீதம் பேர் இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இதில் 7,864 பேர் பணியில் இருக்கும் போதே பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். 45,625 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.
பங்களிப்பு தொகை மட்டுமே திருப்பித் தரப்படுகிறது
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களிடம் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவு தொகையை அரசும் பங்களிப்பாக செலுத்தும். அவசரத் தேவைக்கு அந்த நிதியிலிருந்து தொகை எடுக்கும் வசதியும் இருந்தது. மேலும், ஓய்வுக்குப் பிறகு பணிக்கொடை, மாதாந்திர ஓய்வூதியம், ஓய்வூதியர் மறைவுக்குப் பின் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல பலன்கள் கிடைத்தன. ஆனால் புதிய திட்டத்தில் இத்தகைய பலன்கள் மறுக்கப்பட்டுள்ளன. பணியில் இருந்தபோது பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு தொகை மட்டுமே திருப்பித் தரப்படுகிறது.
அறிக்கையில் என்ன இருந்தது இதுவரை வெளியாகவில்லை
தமிழ்நாட்டில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த கோரி கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 2011ல் அதிமுக, 2016 மற்றும் 2021ல் திமுக தலைமையிலான அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தன. 2011 வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஜெயலலிதா அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கையில் என்ன இருந்தது என்பது இதுவரை வெளியாகவில்லை.
புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கம்
2021ல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 2026 சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு ‘TOPS’ (Tamil Nadu Old Pension Scheme) திட்டத்தை 2026 ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் இதுவரை விதிகள் வகுக்கப்படவில்லை. இதனால் கட்டாய ஓய்வு பெறுபவர்களும், ஓய்வு பெற இருப்பவர்களும் பணப்பலன்கள் இன்றி மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழக அரசுக்கு ஒரு லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

