- Home
- Tamil Nadu News
- இன்னும் சற்று நேரத்தில் தலைநகர் சென்னையில் தெறிக்கவிடப்போகும் மழை! டெல்டா வெதர்மேன் முக்கிய அப்டேட்
இன்னும் சற்று நேரத்தில் தலைநகர் சென்னையில் தெறிக்கவிடப்போகும் மழை! டெல்டா வெதர்மேன் முக்கிய அப்டேட்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலோர தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
தென் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் (அதாவது 1 மணி வரை) தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழையும், சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பிற்பகலில் கனமழை பெய்யும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்
இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் முகநூல் பக்கத்தில்: தென்மேற்கு வங்ககடலில் நீடித்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கை நிலப்பரப்பின் மீது நீடித்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கோடியக்கரையில் 12 செ.மீ மழை
இன்று காலை 6:30 மணி நிலவரப்படி நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 12 செ.மீ அளவில் மிக கனமழையும், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் 9 செ.மீ, இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் 8 செ.மீ, நாகை மாவட்டம் வேதாரண்யம் 7 செ.மீ, இராமநாதபுரம் பாம்பன் 7 செ.மீ, தலைஞாயிறு 6 செ.மீ, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பிற்பகலில் கனமழை துவங்கும்
இன்றும், நாளையும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஒருசில இடங்களிக் மிககனமழையும் பதிவாகும். சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பிற்பகலில் கனமழை துவங்கும் என தெரிவித்துள்ளார்.