- Home
- Tamil Nadu News
- வேலையை காட்ட ஆரம்பித்த வடகிழக்கு பருமழை! காலையிலேயே சென்னையில் காட்டு காட்டுனு காட்டும் கனமழை
வேலையை காட்ட ஆரம்பித்த வடகிழக்கு பருமழை! காலையிலேயே சென்னையில் காட்டு காட்டுனு காட்டும் கனமழை
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக சென்னை, விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏரி, குளங்களின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ராமநாதபுரம், சென்னை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை விடாமல் பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இதனிடையே தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் புதுச்சேரி முதல் ராமநாதபுரம் வரை கடலோர பகுதிகளிலும் மற்றும் காவிரி படுகை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக ராமேஸ்வரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தமிழகத்தில் கனமழை
இந்நிலையில் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மித கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் கனமழை
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° ஒட்டியும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை
அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் சென்னையில் மீண்டும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதாவது நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், வடபழனி, அண்ணாசாலை, கிண்டி, வேளச்சேரி, போரூர் மற்றும் புறநகர் பகுதிகளில் தாம்பரம், முடிச்சூர், செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை விடாமல் வெளுத்து வாங்கி வருகிறது.