அதி தீவிர புயலாக வலுப்பெறும் தேஜ்! 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம் மழை..!
தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தீவிர புயலான தேஜ், மிக தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த 19ம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் இந்த புயலுக்கு இந்தியா தேஜ் என பெயர் சூட்டியுள்ளது. தேஜ் என்றால் வேகம் என்ற பொருளாகும். தீவிர புயலான தேஜ் மிக தீவிர புயலாக வலுவடைந்தது இன்று முற்பகல் அதி தீவிர புயலாக மேலும் வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தேஜ் புயல் தென்மேற்கு அரபி கடலில், சகோத்ரா (ஏமன்) நகருக்கு 330 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், சலாலா (ஓமன்) நகருக்கு 690 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா (ஏமன்) நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.