- Home
- Tamil Nadu News
- கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!
கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குமரிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 23ம் தேதியன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும், இதன் காரணமாக 25ம் தேதியன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை-தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வலுப்பெறக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்கு நோக்கி நகரக் கூடும் என்பதால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
இன்று கனமழை - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை - தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27ம் தேதி கனமழை - தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்கள் அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் பேரிடரை எதிர்கொள்ள செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்து ஆய்வு செய்தார்கள்.
மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்
மேலும், 24 முதல் 26 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும், இடைஇடையே மணிக்கு 55 கிமீ வேகம் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். 27 முதல் 28 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும், இடைஇடையே மணிக்கு 65 கிமீ வேகம் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். எனவே, மீனவர்கள் 24 முதல் 28 வரை கடல் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்திற்கு கனமழை எச்சரிக்கை
ஆழ்க்கடலில் மீன்பிடிப்புப் பணியில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வானிலை முன்னறிவிப்பின் காரணமாக, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்னனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் நாளை முதல் விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரு அணி நிலைநிறுத்தப்பட உள்ளது. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

