- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் ஏழரையை கூட்டப்போகும் மழை! அலர்ட் கொடுத்து அலறவிடும் வானிலை மையம்!
தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் ஏழரையை கூட்டப்போகும் மழை! அலர்ட் கொடுத்து அலறவிடும் வானிலை மையம்!
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
நேற்று பரவலாக மழை
இதனிடையே நேற்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக உதகையில் பெய்த கனமழையின் காரணமாக அரசு பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அருகில் முழங்கால் அளவிற்கு வெள்ள நீர் தேங்கியதால் கார் ஆட்டோ இருசக்கர வாகனம் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.