- Home
- Tamil Nadu News
- அடுத்த 12 நாட்களுக்கு வெயில் மண்டையை பிளக்கும்! இடியுடன் கூடிய கோடை மழை எப்போது? வெளியான முக்கிய அப்டேட்
அடுத்த 12 நாட்களுக்கு வெயில் மண்டையை பிளக்கும்! இடியுடன் கூடிய கோடை மழை எப்போது? வெளியான முக்கிய அப்டேட்
Tamilnadu Rain: இன்று முதல் ஏப்ரல் 21 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி
தமிழகத்தில் கோடை வெயின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இதன் காரணமாக நேற்று வேலூர், மதுரை, ஈரோடு, கரூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. அதுமட்டுமல்லாமல் தற்போது நிலவி வரும் அதீத வெப்பம் மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பு காரணமாக மக்கள் கடும் புழுக்கத்தால் (Humidity) அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை மற்றும் வெயில் குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.
மழை குறித்து முக்கிய அப்டேட்
அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில், மரத்வாடா முதல் மன்னார் வளைக்குடா வரை கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 21 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களான தமிழகம் மற்றும் புதுச்சேயில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வறண்ட வானிலை
அதேபோல் 22 மற்றும் 23 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்
இன்று முதல் 21 வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். இதன் காரணமாக திக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன்
இதனிடையே தமிழ்நாடு டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் 12 நாட்களுக்கு வெப்பம் தொடரும் எனவும் மாத இறுதியில் இடியுடன் கூடிய மழை கோடை மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். அதாவது வானிலை அமைப்பை பொருத்தவரையில் கடல் சார்ந்த அலைகள் மற்றும் ஈரப்பதம் எல்லாமே நமக்கு சாதகமான நிலையில் தற்போது இல்லை. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக வெப்பநிலை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. தமிழக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படுகிறது.
12 நாட்களுக்கு எச்சரிக்கை
குறிப்பாக மேற்கு மாவட்ட உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 40 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. குறிப்பாக வேலூர் பரமத்தி மேலூர் போன்ற இடங்களில்யெல்லாம் 41 டிகிரி 42 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பகல் நேரத்தில் பதிவு வாகி வருவதை பார்க்க முடிகிறது. இந்த சூழல் அடுத்து வரும் 12 நாட்களுக்கு தமிழகத்தில் நீடிக்கும். குறிப்பாக ஏப்ரல் 28ஆம் தேதி வரை காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பகுதியில் பகல் நேரத்தில் தெளிவான வானத்துடன் வெப்பமான சூழல் நிலவும்.
கோடை மழை எப்போது
பகல் நேர வெப்பநிலை இயல்பை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்து காணப்படும். உள் மாவட்டங்களில் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்ட அதனை ஒட்டி இருக்கக்கூடிய அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை என்பது 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கோடை மழை ஏப்ரல் 28ம் தேதி முதல் படிப்படியாக தொடங்க இருக்கிறது. பின்னர் மே முதல் வாரத்தில் தீவிரமடைய இருக்கிறது. இந்த ஆண்டு மே மாத கோடை வெப்பசலன மழை இயல்பை விட அதிகமாக பதிவாகும் என தெரிவித்துள்ளார்.

